அமீரக செய்திகள்

UAE: எமிரேட்ஸ் இடையே போக்குவரத்து நேரத்தைக் குறைக்க 3 புதிய நெடுஞ்சாலைகள்..!! துபாய் ஆட்சியாளர் திறப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் எமிரேட்ஸை இணைக்கும் மூன்று புதிய நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள்  அறிவித்துள்ளார். இது குறித்த செய்தி மற்றும் பல புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் எமிரேட்ஸ் இடையேயான தூரம் மற்றும் போக்குவரத்து நேரத்தை குறைக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட 1.95 பில்லியன் திர்ஹம் மதிப்புள்ள தொடர்ச்சியான உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவடைந்து தற்பொழுது சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஷார்ஜாவில் உள்ள மலிஹாவை அபுதாபியில் அல் ஷூவைப்புடன் இணைக்கும் ஒரு சாலையையும், துபாயில் ஹத்தாவை அஜ்மானில் மஸ்ஃபூத் மற்றும் ராஸ் அல் கைமாவில் உள்ள அல்-கூர் மலைகளை இணைக்கும் ஒரு சாலையை நாங்கள் திறந்துள்ளோம்” என்று ஷேக் முகமது விளக்கியுள்ளார்.

மூன்றாவது சாலை ஷார்ஜாவில் உள்ள அல் மடம் மற்றும் ஹத்தா துபாய் சாலையுடன் உள்ள தொடர்பை பலப்படுத்துகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத் துணைத் தலைவர் மேலும் கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகம் உருவானதிலிருந்து நாட்டின் உள்கட்டமைப்பு படிப்படியாக வளர்ந்து வருகிறது. நாங்கள் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தை மிக சிறப்பாக கட்டியெழுப்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.

புதிய திட்டங்கள் வணிக வளர்ச்சியை எளிதாக்கும் மற்றும் உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“நாட்டின் பல்வேறு பிராந்தியங்களை மிக நெருக்கமாக ஒருங்கிணைப்பதன் மூலமும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும், புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் பொருளாதார மதிப்பை உருவாக்கக்கூடிய புதிய மூலோபாய திட்டங்களை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்த முயல்கிறோம். இதன் மூலம் நாட்டின் மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்” என்று அவர் கூறியுள்ளார்.

“ஐக்கிய அரபு அமீரகம் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்த தேவையான ஆதாரங்களை வழங்குவதில் உறுதியாக உள்ளது. எங்கள் உள்கட்டமைப்பு முயற்சிகள், நிலையான அபிவிருத்திக்கான உலகளாவிய மாதிரியாக நாட்டின் நிலையை வலுப்படுத்துவதோடு, உலகின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை அதன் மக்களுக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள சாலைகளின் மொத்த நீளம் 112 கிலோமீட்டர் ஆகும். 

1. ஷேக் கலீஃபா பின் சையத் சாலை

ஷேக் கலீஃபா பின் சையத் சாலை, ஃபுஜைராவிற்கு செல்லும் ஷேக் கலீஃபா சாலையின் (E84) நீட்டிப்பைக் குறிக்கும் புதிய பாதையாகும். இந்த பாதை ஷேக் கலீஃபா சாலையின் இண்டர்செக்‌ஷனில் இருந்து ஷார்ஜா-கல்பா சாலை (E102) வரை விரிவடைந்து ஷார்ஜாவில் உள்ள மிலீஹா பகுதி மற்றும் அல் மடம் பகுதி வழியாக தொடர்கிறது.

இந்த சாலையானது அபுதாபியில் உள்ள அல் ஷுவைப் பகுதியில் முடிவடைகிறது.

52 கி.மீ நீளமுள்ள பாதையில் ஒவ்வொரு திசையிலும் மூன்று லேன்கள் உள்ளன. இந்த சாலை வேகம் மணிக்கு 140 கி.மீ செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

2. அல் வதான் சாலை

இது பல்வேறு பகுதிகளுக்கு இடையேயான நேரடி இணைப்பு வழியைக் குறிக்கிறது. இந்த சாலையின் ஒவ்வொரு திசையிலும் மூன்று லேன்கள் உள்ளன.

இது 42 கிமீ நீளமும், வேகம் மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இது ஹத்தா பகுதியிலிருந்து விரிவடைந்து, அஜ்மானின் மஸ்ஃபூத், அல்முனே பகுதி மற்றும் ராஸ் அல் கைமாவில் உள்ள வாதி அல் கோர் மலைகள் பகுதி வழியாக செல்கிறது. பின்னர் அது ஷார்ஜாவின் மிலீஹா பகுதியில் உள்ள ஷேக் கலீஃபா பின் சயீத் சாலையுடன் சந்திக்கிறது.

3. துபாய்-ஹத்தா சாலை

நிஸ்வா மற்றும் அல் மடம் பகுதிகளுக்கு இடையேயான தற்போதைய துபாய்-ஹத்தா சாலையின் மேம்பாடுகள் இந்த புதிய சாலையில் அடங்கும். மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த சாலையில் வாகனங்கள் ஓட்டுவதற்கு இருபுறமும் மூன்று லேன்கள் உள்ளன. இந்த பாதையின் நீளம் 18 கி.மீ ஆகும்.

குறுகிய பயண நேரம்

புதிய சாலை திட்டங்கள் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இடையிலான தூரத்தையும் நேரத்தையும் குறைக்கும். அல் வதான் சாலை, அல் மடம் ரவுண்டானாவுக்கும் ஹத்தா பகுதிக்கும் இடையிலான தூரத்தை 115 கிமீ இல் இருந்து 95 கிமீ ஆக குறைத்து, போக்குவரத்து நேரத்தை 30 நிமிடங்கள் குறைக்கும்.

கூடுதலாக,ஷேக் கலீஃபா பின் சையத் சாலை அல் ஷூவைப் பகுதி மற்றும் புஜைரா இடையேயான தூரத்தை 115 கிமீ இல் இருந்து 93 கிமீ வரை குறைக்க பங்களிக்கும். இது பயண நேரத்தை 15 நிமிடங்கள் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!