அமீரக செய்திகள்

துபாய்: குடியிருப்பாளர்களுக்காக புதிய மேம்பாலத்தை திறந்து வைத்துள்ள RTA… இனி வாகனங்களின் போக்குவரத்து அதிகரிக்கும் என்று தகவல்!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ராஸ் அல் கோர் (Ras Al Khor) மற்றும் நாத் அல் ஹமர் (Nad Al Hamar) சாலைகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை திறந்து வைத்துள்ளது. ஷேக் ரஷித் பின் சயீத் காரிடர் (Corridor) மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டுள்ள இந்த புதிய மேம்பாலமானது, ரஸ் அல் கோர் மற்றும் நாத் அல் ஹமர் ஆகிய சாலைகளின் இன்டர்செக்‌ஷனில் இருந்து ராஸ் அல் கோர் மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலைகள் வரை நீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் முழுமையாக நிறைவடைந்ததும், ராஸ் அல் கோர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு 10,000 வாகனங்கள் செல்லும் அளவிற்கு அதன் திறனை உயர்த்தி, பயண நேரத்தையும் 20 நிமிடங்களிலிருந்து சுமார் 7 ஆகக் குறைத்து, போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் வாகன ஓட்டத்தை அதிகரிக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த புதிய சாலையில், 1,471 மீட்டர் நீளமுள்ள பாலங்கள் மற்றும் சாலைக்கு அடியில் செல்லும் சுரங்கபாதைகள் அமைக்கப்படுவதால், இது ஒரு மணி நேரத்திற்கு 30,000 வாகனங்கள் செல்லக்கூடிய அளவிற்கு சாலையின் திறனை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த குறித்து, RTAவின் இயக்குநர் ஜெனரலும், நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மத்தர் அல் தாயர் அவர்கள் கூறுகையில், துபாய் – அல் அய்ன் சாலையுடன் இன்டர்செக்‌ஷனில் இருந்து 8 கிமீ நீளமுள்ள ஒரு பிரிவில் ராஸ் அல் கோர் சாலையை விரிவுபடுத்துவது இந்த திட்டத்தில் அடங்கும் என்று தெரிவித்துள்ளார். அதுபோல, ஷேக் முகமது பின் சயீத் சாலையுடன் 2 கிமீ நீளமுள்ள பாலங்களையும், ஒரு சர்வீஸ் சாலையையும் அமைக்கும் பணி இரண்டாம் கட்டத்தில் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த புதிய மேம்பாலத் திட்டமானது, தி லகூன்ஸ் (The Lagoons), துபாய் க்ரீக் (Dubai Creek), மேதான் ஹரிஸான் (Meydan Horizon), ராஸ் அல் கோர் (Ras Al Khor), அல் வாஸ்ல் (Al Wasl) மற்றும் நாத் அல் ஹமர் (Nad Al Hamar) வணிக வளாகம் உட்பட பல பகுதிகளில் வசிக்கும் சுமார் 650,000 குடியிருப்பாளர்களுக்கு இந்த புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முதல் கட்டப் பணிகள்:

இத்திட்டத்தின் ஆரம்பகட்டத்தை 2022 டிசம்பரில், RTA தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக சாலையை 4 கிமீக்கு மேல் மூன்று வழிகளில் இருந்து நான்கு வழிகளாக விரிவுபடுத்தி ஒரு மணி நேரத்திற்கு 10,600 வாகனங்கள் செல்லும் திறன் கொண்ட 1,730 மீட்டர் நீளமுள்ள இரண்டு முக்கிய பாலங்களை ஆணையம் அதிரடியாக கட்டி முடித்துள்ளது. அத்துடன் துபாய்-அல் அய்ன் சாலை மற்றும் துபாய் க்ரீக் துறைமுகத்திற்குச் செல்லும் மூன்று பாதைகள் மற்றும் 740 மீட்டர் நீளமுள்ள இரண்டு முக்கிய பாலங்களில் ஒன்று முதல் கட்டத்தில் கட்டப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக, துபாய் க்ரீக் துறைமுகத்தில் இருந்து ராஸ் அல் கோர் சாலைக்கு செல்லும் போக்குவரத்திற்கு சேவை செய்ய ஒரு மணி நேரத்திற்கு சுமார் 3,100 வாகனங்கள் செல்லும் திறன் கொண்ட 990 மீட்டர் நீளமுள்ள இருவழிப் பாலம் மற்றும் சரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து இயக்கத்தை எளிதாக்க, 1.5 கிமீ நீளமுள்ள புதிய 4-வழிச் சாலையை அமைப்பதும் முதல் கட்டப்பணியில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டாம் கட்டப் பணிகள்:

இத்திட்டத்தில் நாத் அல் ஹமர் மற்றும் ராஸ் அல் கோர் சாலைகளின் சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள் இரண்டாம் கட்டப் பணிகளில் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேவேளை, நாத் அல் ஹமர் சாலையில் இருந்து ஷேக் முகமது பின் சயீத் சாலைக்கு உள்வரும் வாகனங்களுக்கு வசதியான இடது திருப்பங்களை அமைப்பதற்காக, 988 மீட்டர் நீளமுள்ள 2-வழி பாலத்தை அமைக்க உள்ளது. எனவே, இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 30,000 வாகனங்கள் செல்லும் அளவிற்கு திறன் அதிகரிக்கும்.

அதுபோலவே, துபாய்-அல் அய்ன் சாலையின் திசையில் செல்லக்கூடிய நாட் அல் ஹமர் சாலையில் இருந்து ராஸ் அல் கோர் சாலைக்கு வரும் போக்குவரத்தின் வசதிக்கு கூடுதலாக 115 மீட்டர் நீளமுள்ள இருவழிப் பாலமும் 368 மீட்டர் நீளமுள்ள இருவழி சுரங்கப்பாதையும் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இது எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!