அமீரக செய்திகள்

இந்தியா G20 உச்சிமாநாடு: அமீரக ஜனாதிபதி ஷேக் முகமதுவை வரவேற்ற இந்திய பிரதமர்..!! வீடியோவைப் பகிர்ந்த அமீரக தலைவர்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள், நேற்று முன்தினம் (செப்டம்பர் 10, ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். உச்சிமாநாட்டில் தான் பங்கேற்ற வீடியோவை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டதுடன், அங்கு உலக நாடுகளின் தலைவர்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் ஷேக் முகம்மது அவர்கள் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள வீடியோ, உற்சாகமான வரவேற்பு காட்சிகள் தொடங்கி, இந்தியாவின் வண்ணமயமான காட்சிகள் மற்றும் உலகின் தலைசிறந்த பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் 20 நாடுகளின் தலைவர்கள் கூடிய இரண்டு நாள் உச்சிமாநாட்டின் சிறப்பம்சங்களை காட்டுகிறது.

இந்தியாவின் அழைப்பை ஏற்று உச்சி மாநாட்டிற்குச் சென்ற ஷேக் முகமது அவர்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கைகுலுக்கி அரவணைத்து வரவேற்றுள்ளார். அதேபோல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அவர்களும் ஷேக் முகமதுவை ‘நண்பர்’ என கூறி அரவணைப்புடன் வாழ்த்துவதையும் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் உரையாற்றும் காட்சித் துளிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்த உச்சி மாநாட்டில் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தில் (India-Middle East-Europe Economic Corridor) சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும், நிலையான எதிர்காலத்திற்கு பங்களிப்பதற்கும் நாட்டின் ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது.

G20 குழுவில் இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கோபத்தை தணிப்பதில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த வார இறுதியில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்ட கொள்கை பரிந்துரைகள் மற்றும் இலக்குகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய நவம்பரில் ஒரு மெய்நிகர் கூட்டத்தை நடத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, G20 குழுவின் தலைவர்களை கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!