அமீரக செய்திகள்

ஓமன் நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை… சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் அவதி!

கடந்த இரண்டு நாட்களாக, ஓமானில் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால், பள்ளத்தாக்குகள் மற்றும் குட்டைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் பல இடங்களில் மக்கள் செல்லும் பிரதான சாலைகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனை ஒட்டி ஓமானின் அல் ஹஜார் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காணொளி சோசியல் மீடியாவில் பதிவேற்றப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. திகிலூட்டும் இந்த வீடியோவில் சாலைகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் மறைந்து போவதை காட்டுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சாலைகளில் மேற்கொண்டு பயணம் செய்ய முடியாமல் தவிப்புடன் நிற்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

மேலும், கார் மேகங்கள் உருவாவதால் அல் ஹஜர் மலைகள் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை மற்றும் சுறுசுறுப்பான கீழ்நோக்கிய காற்றுகளால் தாக்கப்படலாம் என்று ஓமானின் வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை எச்சரித்துள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட வான்வழி புகைப்படங்கள் தோஃபர் கவர்னரேட்டின் கடற்கரைகள் மற்றும் மலைகளில் இலையுதிர்கால மேகங்கள் சூழ்ந்திருப்பதை காட்டுகின்றன.

மேலும் ஹஜர் மலைகளின் சில பகுதிகளில் குவிந்த மேகங்கள் உருவாகியுள்ளதால் சில சமயங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன எனவும், சில சமயங்களில் அதிவேகமாக காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமானின் வேளாண்மை, மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சகத்தின் ஆய்வின்படி (MAFWR) படி, கடந்த இரண்டு நாட்களில் அல் கபில் மாகாணத்தில் 47 மிமீ மழை பெய்துள்ளது, அதைத் தொடர்ந்து அல் கபூரா மற்றும் ருஸ்டாக் மாகாணங்களில் 39 மிமீ மற்றும் 32 மிமீ மழை பெய்துள்ளது. எனவே, பொதுமக்கள் வானிலை அறிக்கைகளை கருத்தில் கொண்டு வெளியில் செல்லும் பொழுது முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!