அமீரக செய்திகள்

அபுதாபி சிட்டியை இணைக்கும் முக்கிய பாலத்தில் ஆறு மாத கால பராமரிப்பு பணி தொடக்கம்..!! வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்..!!

அபுதாபி சிட்டியை மற்ற பிற பகுதிகளுடன் இணைக்கும் மிக முக்கிய நான்கு பாலங்களில் ஒன்றானதும், அபுதாபியின் மிகவும் பழைமையான மற்றும் முதல் பாலமான அல் மக்தா பாலத்தில், சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அபுதாபி நகர முனிசிபாலிட்டியின் அதிகாரிகள் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 13) அறிவித்துள்ளனர். இன்று முதல் அக்டோபர் 2022 வரை என சுமார் 6 மாதங்களுக்கு பராமரிப்பு பணிகள் தொடரும் என்றும், இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அபுதாபியின் சமூகத்திற்கு சேவை செய்யும் உள்கட்டமைப்பு சொத்துக்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அல் மக்தா பாலத்தின் இருபுறமும் பராமரிப்பு மற்றும் கட்டுமானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையுடன் இணைந்த அபுதாபி நகர முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

பாலத்தின் அடுக்குகளை பராமரித்தல், இருபுறமும் பாதசாரிகளுக்கான நடைபாதைகளை பராமரித்தல், மேற்புற ஆர்ச்சை பராமரித்தல் மற்றும் மீண்டும் வண்ணம் தீட்டுதல், கான்கிரீட் மற்றும் உலோகத் தடைகள் போன்ற பாலத்தின் அடியில் உள்ள முக்கிய பகுதிகளை பராமரித்தல் போன்ற பணிகள் இந்த ஆறு மாத கால புதுப்பிக்கும் திட்டத்தில் அடங்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளின் போது, ​​பாலத்தின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும், இந்த காலங்களில் பாலத்தை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பராமரிப்பு பணியின் போது, ​​முந்திச் செல்வதைத் தவிர்க்கவும், எச்சரிக்கையுடன் செயல்படவும் வாகன ஓட்டிகளை அபுதாபி நகர முனிசிபாலிட்டி கேட்டுக் கொண்டுள்ளது. புதுப்பிக்கும் பணிகள் நிறைவடையும் பட்சத்தில் அல் மக்தா பாலம் மிக உயர்ந்த தரத்தை பூர்த்தி செய்யும் எனவும் அபுதாபி முனிசிபாலிட்டி கூறியுள்ளது.

மேலும் இந்த புதுப்பிக்கும் பணிகள் அபுதாபியின் அழகு மற்றும் அதன் வசதிகளின் வளர்ச்சியுடன் ஒத்துப்போகிறது எனவும், அதே நேரத்தில் இந்த பழமையான பாலம் தனித்துவமான கட்டமைப்பு அடையாளங்கள், அதன் சிறப்பம்சம் பாதிக்கப்படாத வண்ணம் புத்திசாலித்தனத்துடன் பராமரிக்கப்படுகிறது என்றும் அபுதாபி நகராட்சி தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!