அமீரக செய்திகள்

UAE: ஓட்டுநர்கள் கைது!! வாகனங்களும் பறிமுதல்..!! துபாய் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!!

துபாயில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் போது சாலையில் பிறருக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக வாகனங்களில் ஸ்டண்ட் செய்த ஓட்டுனர்களை துபாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாகன ஓட்டிகள் கைது செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் சுமார் 90 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட  ஓட்டுனர்கள் அவர்களது உயிருக்கு மட்டுமின்றி, மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாலையில் கடுமையாக விதிகளை மீறிச் செயல்பட்டதாக துபாய் காவல்துறையின் பொதுப் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி கூறியுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், “ரோந்துப் பணியில் இருந்த போக்குவரத்து அதிகாரிகள் அல் ருவையா பகுதியில் தாறுமாறாக வாகனங்களை இயக்கிய ஓட்டுநர்களைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அந்த ஓட்டுனர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்” என தெரிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி, SUV-கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட ஓட்டுனர்களை சம்பந்ததப்பட்ட நீதித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் என்றும், விதிகளை மீறிய ஓட்டுனர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் சாலையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பாக மோசமான வானிலையின் போது சட்டத்தை அத்துமீறி நடப்பது எச்சரிக்கைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாலைகளில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக வாகனங்களை இயக்குபவர்களுக்கு சட்டத்தில் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!