UAE: பொருட்களுக்கு அதிரடி சலுகைகள், தள்ளுபடிகளுடன் 33 நாட்கள் நடக்கும் ஷார்ஜா ரமலான் ஃபெஸ்டிவல்…!! எப்போது துவங்கும்..??
ஷார்ஜா வர்த்தக மற்றும் தொழில்துறை சேம்பரானது (SCCI) இந்த ஆண்டு வரவிருக்கும் ரமலானை முன்னிட்டு 32வது ஷார்ஜா ரமலான் ஃபெஸ்டிவலை நடத்தவுள்ளது. இது வரும் ஏப்ரல் 2 அன்று தொடங்கி மே 4, 2022 அன்று முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அரசாங்கத் துறைகள், அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் SCCI ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த 33 நாள் நிகழ்வானது, ஷாப்பிங் செய்பவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அற்புதமான சலுகைகள், உற்சாகமான தள்ளுபடிகளை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் ரமலான் மாதம் முழுவதும் ஷார்ஜாவின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான சுவாரசியமான செயல்பாடுகளும் இதில் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷார்ஜா ரமலான் ஃபெஸ்டிவலின் 32வது பதிப்பு, “ஷார்ஜா ஆஃபர்ஸ்” என்ற கருப்பொருளின் கீழ் ஒரு ஒருங்கிணைந்த உத்தியை SCCI அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து வருகிறது.
ஷார்ஜா ரமலான் ஃபெஸ்டிவல் மாநில அளவில் பழமையான வணிக மற்றும் சுற்றுலா நிகழ்வுகளில் ஒன்றாகும். ஏனெனில் இது ஆண்டுதோறும் பல சந்தைப்படுத்தல், பொழுதுபோக்கு, பாரம்பரியம், வரலாற்று, கலை மற்றும் மத நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை உள்ளடக்கியது. அதன் செயல்பாடுகள் ஷார்ஜா எமிரேட்டின் அனைத்து நகரங்களையும் உள்ளடக்கி இருக்கும் எனவும் குறிப்பிடத்தக்கது.