அமீரக செய்திகள்

UAE: வான வேடிக்கை, திருவிழா, இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை.. DCT சுற்றறிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது ஜனாதிபதியான மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் மறைவுக்கு நாடு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அபுதாபியில் அனைத்து இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2004 ம் வருடம் முதல் அமீரகத்தின் ஜனாதிபதியாக இருந்து வந்த ஷேக் கலீஃபா அவர்கள், மே 13 ம் தேதி வெள்ளிக்கிழமை இறந்து போனதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அமீரக ஜனாதிபதியின் மரணத்தை தொடர்ந்து அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DCT அபுதாபி) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மறு அறிவிப்பு வரும் வரையிலும் அபுதாபி எமிரேட்டில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் நடனம் இடம்பெறும் அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த நாட்களில் வாணவேடிக்கை நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களும் நிறுத்தப்படுவதாகவும் அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளது. எனினும் இந்த துக்க காலத்தில் திருமணங்கள் நடத்தப்படலாம் எனவும், ஆனால் நிகழ்வுகளில் இசை இசைக்கப்படக்கூடாது என்றும் அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை வலியுறுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை – அபுதாபி, வரும் வாரத்தில் நடைபெறவிருந்த ‘கலாச்சார உச்சிமாநாடு – அபுதாபி 2022’ இன் ஐந்தாவது பதிப்பை ஒத்தி வைப்பதாகவும், புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. மேலும் நிகழ்ச்சிகளுக்கான முன்பதிவுகளை எதிர்கால தேதிகளுக்கு மாற்றியமைக்க அபுதாபியில் உள்ள ஹோட்டல்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

அமீரக ஜனாதிபதியின் மரணத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஏற்கனவே நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அமீரகத்தில் நடைபெறவிருந்த இந்திய சினிமாவின் IIFA விருது வழங்கும் விழாவும் ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!