அமீரக செய்திகள்

UAE: பயணிகளுக்கு இனி அமீரக விமான நிலையத்திலும் PCR டெஸ்ட் இல்லை.. புதிய அறிவிப்பை வெளியிட்ட அபுதாபி..!!

அமீரகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்ததையடுத்து பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அமீரக அரசு பிப்ரவரி மாத இறுதியில் நீக்கியது. இதில் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, பயணத்திற்கு முந்தைய PCR சோதனை, தனிமைப்படுத்தல் போன்ற விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது அடங்கும்.

அதன் தொடர்ச்சியாக தற்பொழுது அபுதாபி விமான நிலையத்திற்கு பயணிக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்படாத பயணிகள் அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிறகு PCR பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் விருப்பப்பட்டால் விமான நிலையத்தில் இருக்கும் சோதனை மையத்தில் 40 திர்ஹமிற்கு சோதனை மேற்கொள்ளலாம் என்று அபுதாபியை மையமாக கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பையடுத்து அபுதாபிக்கு பயணம் செய்யும் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு PCR சோதனை முற்றிலுமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு விமானத்தில் புறப்படும் முன் PCR பரிசோதனை செய்ய தேவையில்லை என்று அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

அத்துடன் அந்த அறிவிப்பில் “அபுதாபிக்கு பயணிக்கும் தடுப்பூசி பெறாத நபர்கள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறை PCR பரிசோதனையை அல்லது புறப்படுவதற்கு 30 நாட்களுக்குள் QR குறியீட்டைக் கொண்ட கொரோனா பாதித்து மீண்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போதைய அறிவிப்பின் படி தடுப்பூசி போடாதவர்களுக்கு புறப்படுவதற்கு முன்னர் மட்டும் PCR சோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதே நேரம் தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவிற்கு முந்தையது போலவே புறப்படுவதற்கு முன்னும் அபுதாபி வந்திறங்கியவுடனும் PCR சோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் எப்போதும் போலவே அபுதாபி பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!