அமீரக செய்திகள்

இன்று கொண்டாடப்படும் அமீரக தேசிய தினம்.. 7 எமிரேட்டுகளின் ஆட்சியாளர்களும் பகிர்ந்த ஊக்கமளிக்கும் செய்தி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தேசிய தினத்தை முன்னிட்டு அமீரகத்தின் ஏழு எமிரேட்டுகளின் ஆட்சியாளர்களும் ஊக்கமளிக்கும் செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர். ஐக்கிய அரபு அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள், குடிமக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்துள்ளார். அதே போல் துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அடுத்த 50 ஆண்டுகளில் நாடு மேலும் உயரும் என தெரிவித்துள்ளார். 

ஏழு எமிரேட்டுகளின் ஆட்சியாளர்களும் தேசிய தினத்தை முன்னிட்டு பகிர்ந்த செய்தி

அபுதாபி

51வது ஐக்கிய அரபு அமீரக தேசிய தினமானது கடந்த கால படிப்பினைகளை நினைவுகூரவும், நிகழ்காலத்தை விழிப்புணர்வு மற்றும் சிந்தனையுடன் பார்க்கவும், எதிர்காலத்தை நம்பிக்கையுடனும் பார்க்கும் நாளாகும் என்று ஐக்கிய அரபு அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கூறியுள்ளார். மேலும் குடிமக்களின் நலனே எங்கள் முன்னுரிமை என்றும் தெரிவித்துள்ளார்.

துபாய்

ஐக்கிய அரபு அமீரக தலைவர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் வழிகாட்டுதலின் கீழ் ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து முன்னேறும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் கூறியுள்ளார். மேலும் வரவிருக்கும் 50 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் நிலையான வளர்ச்சியைப் பெற்றிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் “எங்கள் தாயகம் எப்போதும் அமைதியை உண்டாக்கும் இடமாக இருக்கும், மேலும் அரசாங்கத்தின் செயல்திறனை மேம்படுத்துதல், புதுமைகளை வளர்த்தல், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துதல், வறுமையை எதிர்த்துப் போராடுதல், தூய்மையான ஆற்றலை மேம்படுத்துதல் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச முயற்சிகளை நாங்கள் ஆதரிப்போம்” என தெரிவித்துள்ளார். 

ஷார்ஜா

சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்கள், தேசிய தினமானது அதன் கொள்கைகள், மத நெறிமுறைகள் மற்றும் முன்னணி கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் ஆர்வமுள்ள ஒரு சிறந்த மற்றும் லட்சிய நாட்டின் பிறப்பைக் கண்ட நாளாகக் குறிக்கிறது என கூறியுள்ளார்.

அத்துடன் “இந்த நாளில், மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் அவரது சகோதரர்கள், தேசத்தின் நிறுவனர்கள் மற்றும் அமீரகத்தை நிறுவிய அவர்களின் உறுதிப்பாடு, ஞானம் மற்றும் தொலைநோக்கு பண்பை நாங்கள் நினைவுகூருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அஜ்மான்

ஐக்கிய அரபு அமீரகத்தின் உச்ச கவுன்சில் உறுப்பினரும், அஜ்மான் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் ஹுமைத் பின் ரஷீத் அல் நுவைமி அவர்கள், ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம் மாபெரும் தியாகங்கள் மற்றும் சாதனைகளின் வளமான பயணத்தை எடுத்துக்காட்டுகிறது என்று கூறியுள்ளார். மேலும் இந்த நாளில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதன் தலைமையின் சாதனைகளுக்காக நாங்கள் எங்கள் பெருமையையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஸ்தாபக தந்தையான மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் மறைந்த ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தலைமையில் அமீரக தலைவர்கள் விட்டுச் சென்ற சாதனைகளின் மகத்தான பாரம்பரியத்தையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்,

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம் மக்களுக்கு ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் நல்ல கல்வியை வழங்குவதற்கான நேர்மையான முயற்சிகளை குறிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஃபுஜைரா

சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஃபுஜைராவின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் ஹமத் பின் முகமது அல் ஷர்கி கூறுகையில் “இந்த தேசிய தினத்தில், மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் மற்ற அமீரக தந்தைகளால் நிறுவப்பட்ட அமீரகத்தின் கொள்கைகளை ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துபாயின் ஆட்சியாளரான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோரின் தலைமையின் கீழ், தேசத்தை வலுப்படுத்த எதிர்கால சந்ததியினருக்கும் தொடருகிறோம்” என குறிப்பிட்டுள்ளார். 

உம் அல் குவைன்

சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் உம் அல் குவைனின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் சவுத் பின் ரஷித் அல் முஅல்லா கூறுகையில் “குறுகிய காலத்தில், நமது நாடு வலுவான போட்டியாளராக மாறியுள்ளது மற்றும் விண்வெளி அறிவியல், அமைதியான அணுசக்தி ஆகியவற்றில் மெகா திட்டங்களைத் தொடங்குவதில் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் பிற துறைகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியையும் கண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

ராஸ் அல் கைமா

ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்ட தினத்தைக் குறிக்கும் இந்த நாள் நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணம் என்று உச்ச கவுன்சில் உறுப்பினரும் ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் “51 ஆண்டுகளுக்கு முன்பு அமீரகம் நிறுவப்பட்டதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகம் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளது. இது பிராந்திய ரீதியாகவும் உலகளவில் உயர்ந்த நிலையை அடைய உதவுகிறது. சகிப்புத்தன்மை, சகவாழ்வு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய மதிப்புகளின் தொகுப்பால் இயக்கப்படும் ஐக்கிய அரபு அமீரகம், நாட்டின் வளர்ச்சியை முன்னேற்றுவதுடன் மக்கள் தங்கள் பங்கை சிறப்பாகச் செய்ய அதிகாரம் அளிப்பதன் மூலம், அதன் உலகளாவிய இருப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது” என்று கூறியுள்ளார்.

“இந்த நாளில், ஸ்தாபக தந்தைகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நமது நாட்டின் ஆதாயங்களைப் பாதுகாப்பதற்கும், நமது சமூகம் மற்றும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் நாங்கள் செயல்படுவோம் என்ற உறுதிமொழியை நாங்கள் புதுப்பிக்கிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!