அமீரக செய்திகள்

UAE: அடுத்த 50 ஆண்டுகளுக்கான கோட்பாடுகளை அறிவித்த அமீரக தலைவர்கள்..!! குடிமக்கள், குடியிருப்பாளர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதே எங்கள் ஒரே பணி..!!

உலகின் பல நாடுகளை விடவும் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் புதுப்புது விஷயங்களை அமல்படுத்தி உலகளவில் பல நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியையும் மதிப்பையும் மேலும் உயர்த்தும் விதமாக அடுத்த 50 ஆண்டுகளுக்கான புதிய கொள்கைகளை கொண்ட ஒரு ஆவணத்தை ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 5) அறிவித்துள்ளனர்.

’50 இன் கோட்பாடுகள் (Principles of the 50)’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தை, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும் மற்றும் துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணை உச்ச தளபதியும், அபுதாபியின் பட்டது இளவரசருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இந்த புதிய கோட்பாடுகள் பற்றி கூறியதாவது, “ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதே எங்கள் ஒரே பணி. அமைதி மற்றும் உரையாடலை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் அணுகுமுறையுடன் கூடிய பொருளாதார நடவடிக்கை அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சி பாதையை வழிநடத்தும். அடுத்து வரவிருக்கும் கட்டங்கள் (phases) ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து பிராந்தியங்கள் மற்றும் துறைகளின் விரிவான மற்றும் சீரான வளர்ச்சியைக் காணும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் இந்த புதிய கோட்பாடுகளை கொண்ட ஆவணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், இது நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் புதிய சகாப்தத்திற்கான ஒரு மூலோபய சாலை வரைபடம் (Strategic Roadmap) அதாவது துல்லியமாக இலக்கை அடையக்கூடிய வகையிலான ஒரு வளர்ச்சி திட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் முன்னுரிமை வளர்ச்சி என்றும், மற்றும் அனைவரும் சேர்ந்து ஒரே அணியாக பணியாற்றுவதே அதன் குறிக்கோள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனுடன் “நம் நாடு ஒன்று, நம் கொடி ஒன்று” என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் கூறுகையில், இந்த புதிய பொருளாதார பிரச்சார நடவடிக்கையால், அடுத்த 50 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் உலகப் பொருளாதாரத்தில் ஒரு வலிமையான நாடுகளில் ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

“திறமை, நிபுணத்துவம் மற்றும் முதலீடுகளுக்கான முக்கிய இடமாக இருக்கும் நமது நாடு அதன் நிலையை மேலும் வலுப்படுத்த தொழில்முனைவோர் சாதனைகளை உருவாக்கும்.” என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் கூறியுள்ளார்.

அமீரகம் அறிவித்துள்ள அடுத்த 50 ஆண்டுகளுக்கான பொருளாதார நடவடிக்கைகளின் கீழ் பல புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தற்போது புதிதாக கிரீன் விசா (Green Visa) எனும் புதிய குடியிருப்பு வகையை சார்ந்த விசா, ஃபிரீலான்ஸ் விசா (Freelance Visa) அதாவது தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கும் விசா மற்றும் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அமீரகத்தில் பணிபுரிய அனுமதிக்கும் வகையிலான புதிய விசா திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!