அமீரக செய்திகள்

UAE: துணிகளை பால்கனியில் காயப்போடுபவரா நீங்கள்..?? 1,000 திர்ஹம் அபராதம்..!! அதிகாரிகள் எச்சரிக்கை..!!

அபுதாபியில் உள்ள அதிகாரிகள், குடியிருப்புக் கட்டிடங்களில் இருக்கும் பால்கனியில் நகரின் அழகியல் தோற்றத்தை சிதைக்கும் வகையில் துணிகளை காயப் போடும் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

அபுதாபி நகர முனிசிபாலிட்டியானது, நகரின் அழகியல் தோற்றத்தை பராமரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் பொது இடங்களில் ஈரத் துணிகளை உலர்த்துவதற்கான முறையான தற்போதைய விதிமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து குடியிருப்பாளர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட மெய்நிகர் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

தற்பொழுது முனிசிபாலிட்டி மேற்கொண்ட இந்த பிரச்சாரத்தின் நோக்கம் நகரத்தின் அழகியல் தோற்றம் பராமரிக்கப்படுவதையும், சுகாதாரமற்ற முறையில் சலவை செய்த துணிகளை உலர்த்துவதை நிறுத்துவதையும் உறுதி செய்வதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முனிசிபாலிட்டி வெளியிட்ட அறிக்கையில், “அபார்ட்மெண்டின் பால்கனியில் துவைத்த துணிகளை காயவிடுவது அல்லது ஜன்னல் அல்லது சாளரங்களில் தொங்கவிடுவது கட்டிடத்தின் அழகியல் தோற்றத்தை சிதைக்கிறது மற்றும் இது சட்டப்படி அனுமதிக்கப்படாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “குடியிருப்பாளர்கள் நகரம் முழுவதும் அழகியல் தோற்றத்தை பராமரிக்க வேண்டும் மற்றும் அவர்களின் அடுக்குமாடி பால்கனிகளை தவறாக பயன்படுத்தக்கூடாது” எனவும் அறிவுறுத்தப்படுள்ளது.

இவ்வாறு துணிகளை தொங்கவிடுவதைத் தவிர்க்க, எலக்ட்ரானிக் துணி உலர்த்திகள் மற்றும் துணிகளை உலர்த்தும் ரேக்குகள் போன்ற சரியான மாற்று நவீன துணி உலர்த்தும் நுட்பங்களைக் கடைப்பிடிக்குமாறு மக்களை முனிசிபாலிட்டி வலியுறுத்தியுள்ளது.

அபுதாபியில் பால்கனிகளை இவ்வாறு தவறாக பயன்படுத்தினால் 1,000 திர்ஹம் மற்றும் அதற்கு மேல் அபராதம் விதிக்கப்படும் என்று குடிமை அமைப்பு ஏற்கெனவே எச்சரித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!