அமீரக செய்திகள்

தீபாவளிக்குப் பிறகு அமீரகம்-இந்தியா இடையேயான விமானங்களின் டிக்கெட் விலை 20% குறைய வாய்ப்பு..!!

கொரோனா பரவலின் காரணமாக முடங்கப்பட்ட சுற்றுலாத்துறையில் தற்பொழுது சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாலும், கொரோனா தொற்றுநோயால் வேலை இழந்தவர்கள் அல்லது விடுப்பில் இருந்தவர்கள் அமீரகத்திற்கு திரும்பி வருவதாலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான பயணம் அதிகரித்து வருவதாக பயணத் துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கூடுதலாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்திய விமான நிறுவனங்கள் தங்களின் விமான சேவைகளை அதிகரித்துள்ளன. மேலும் பொருளாதாரமானது மெதுவாகவும், சீராகவும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் விமான நிறுவனங்களுக்கிடையே போட்டி நிலவுவதால் விமான கட்டணங்களுக்கு இடையேயும் போட்டி நிலவுகிறது.

கார்ப்பரேட் தொடர்பான பயணம் மெதுவாக இயல்பு நிலைக்கு மீண்டு வருவதால் ஐக்கிய அரபு அமீரக பயணத் துறை சில முன்னேற்றங்களைக் காண்கிறது என்று புளூட்டோ டிராவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அவினாஷ் அட்னானி தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து கூறுகையில், “கார்ப்பரேட் பயணங்களில் 20-30 சதவிகிதம் உயர்ந்து வருவதை நாங்கள் காண்கிறோம். இருப்பினும், மக்களுக்கு பயணம் தொடர்பான பயம் இன்னும் உள்ளது.மேலும் பல நாடுகள் சர்வதேச பயணத்திற்கு கட்டுப்பாடுகள் இருப்பதால், இது முழு மீட்பையும் பாதிக்கிறது. அதனை தவிர்த்து, தற்பொழுது முன்பை விட சிறப்பாகவே விமானப் போக்குவரத்து செயல்பட்டு வருகின்றது. நாங்கள் ஜனவரி மாதத்திற்குள் பயணத்துறை மேலும் மேம்படும் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

அல் அவல் டூரிசம் நிறுவனத்தின் வணிக மேம்பாட்டு மேலாளர் முஹம்மது ஜாஃபர், அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான விமான பயண நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் “டிசம்பர்-ஜனவரி மாதங்களுக்குப் பிறகு, விமானப் பயணத்தில் மேலும் அதிகரிப்பு இருக்கும், ஏனெனில் ஜனவரிக்குப் பிறகு மக்கள் தங்கள் நிறுவனப் பணிகளுக்காகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பயணிக்க வேண்டியிருக்கும். ஆகவே இது எதிர்வரும் மாதங்களில் விமானப் போக்குவரத்தில் முன்னேற்றம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து ஏராளமானோர் தங்களது பெற்றோரை அமீரகத்திற்கு அழைத்து வருவதால் இந்தியாவிற்கும் அமீரகத்திற்கும் இடையேயான விமானபோக்குவரத்தில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அமீரகம் வருபவர்களில் பெரும்பாலானோர் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பயணிக்க முடியாத நிலையில் இருந்தவர்கள் எனத் தெரிகிறது.

தீபாவளி பண்டிகையின்போது துபாய்-சென்னை வழியேயான ஒரு வழிப் பயணத்திற்கு சராசரியாக 550 திர்ஹம் வரை விமானக்கட்டணம் இருக்கின்றது. தீபவளிக்குப் பிறகு ஒரு வாரம் கழித்து இந்த கட்டணம் 20 சதவீதம் குறைந்து 400-450 திர்ஹம்ஸ் வரை ஆகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சர்வதேச பயணிகளை நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்குவதற்கான புதிய முடிவு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் விமான பயணத் தொழிலுக்கு உதவியது என்றும் சுற்றுலாத்துறையில் பணிபுரிபவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு இந்தியா அமீரகம் இடையே இயக்கப்படும் விமானங்களுக்கு 1,000 திர்ஹம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அந்த கட்டணம் 400 திர்ஹம் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகம் இந்தியா இடையே கடந்த சில மாதங்களாக பயணம் மேற்கொள்ள விரும்பியவர்கள் பலரும் தற்பொழுது தங்களின் பயணத்தை நிறைவு செய்துள்ளதால் வரும் காலங்களில் விமான டிக்கெட்டுகளின் விலை குறையும் என்று சுற்றுலாத்துறையில் பணிபுரிபவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!