அமீரக செய்திகள்

துபாயில் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த 5 இந்தியர்கள் விடுதலை.. நாடு திரும்ப உதவிய அமைச்சர் மற்றும் அதிகாரிகள்..!!

துபாயில் 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவைச் சேர்ந்த இந்த 5 பேரும் பிப்ரவரி 20 ஆம் தேதி ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் மீண்டும் தங்கள் குடும்பத்துடன் இணைந்துள்ளனர்.

துபாயில் கட்டுமானத் தொழிலாளர்களாக வேலை செய்து வந்த சிவராத்திரி மல்லேஷ், சிவராத்திரி ரவி, கொல்லம் நம்பல்லி, துண்டுகுல லக்ஷ்மன் மற்றும் சிவராத்திரி ஹன்மந்து ஆகிய ஐந்து பேரும் தெலுங்கானாவின் ராஜண்ணா சிர்சில்லா (Rajanna Sircilla) மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இது குறித்து தெலுங்கானா வளைகுடா NRI பிரிவின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ரெட்டி கூறுகையில், 2005ஆம் ஆண்டு அவர்களுக்கும் நேபாள காவலர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் துரதிர்ஷ்டவசமாக காவலர் உயிரிழந்ததாகவும், இச்சம்பவம் எந்த தவறான நோக்கத்துடனும் செய்யப்படவில்லை என்றும், தற்செயலாக நடந்திருக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு, துபாய் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஐந்து பேருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும், மேல்முறையீட்டிற்குப் பிறகு, அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை 25 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டதாகவும் ரெட்டி கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர்களின் விடுதலை செயல்முறையை விளக்கிய ரெட்டி, சமூகக் குழுக்கள், இந்திய துணைத் தூதரகம் மற்றும் தெலுங்கானா அரசாங்கத்தின் ஈடுபாட்டின் மூலம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு தற்போது விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதாவது, தெலுங்கானா அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இறந்து போன நேபால் நாட்டைச் சேர்ந்த காவலாளியின் குடும்பத்தை நேரில் சந்தித்து, ஐந்து பேரையும் விடுவிப்பதற்காக ‘No Objection Certificate’ சான்றிதழை பெற்று, அதன் பிறகு துபாய்க்கு சென்று உள்ளூர் அதிகாரிகளிடம் முறையிட்ட பின்னரே ஐந்து பேரும் பிப்ரவரி 18ம் தேதி அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், அவர்களிடம் பாஸ்போர்ட் இல்லாத காரணத்தினால், அவர்கள் நாடு திரும்ப இந்திய துணைத் தூதரகம் வெள்ளை பாஸ்போர்ட்டை வழங்கி உதவி செய்துள்ளது. இவ்வாறு ஐந்து நபர்களையும் விடுவிப்பதற்கு உதவி செய்த அமீரக அதிகாரிகள், இந்திய தூதரகம் மற்றும் தெலுங்கானா அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ரெட்டி கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!