அமீரக செய்திகள்

துபாய்: 8 மில்லியன் திர்ஹம்கள் செலவில் இரண்டு புதிய பூங்காக்களை கட்டி முடித்துள்ள முனிசிபாலிட்டி.. விரைவில் திறக்கப்படும் என தகவல்..!!

துபாயில் இரண்டு குடும்ப பொழுதுபோக்கு பூங்காக்களின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்துள்ளதாக துபாய் முனிசிபாலிட்டி இன்று (செப்டம்பர் 13) அறிவித்துள்ளது. துபாயில் உள்ள அல் வர்கா (Al Warqa) 1 மற்றும் 4 ஆகிய வட்டாரங்களில் மொத்தம் 8 மில்லியன் திர்ஹம்கள் செலவில் இந்த பூங்காக்களை கட்டி முடித்துள்ளதாகவும் முனிசிபாலிட்டி குறிப்பிட்டுள்ளது.

துபாய் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக குடியிருப்புப் பகுதிகளில் பல குடும்ப பொழுதுபோக்கு பூங்காக்களை அமைக்க வேண்டும் என்ற முனிசிபாலிட்டியின் இலக்கின் நான்காவது கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த பூங்காக்கள் எமிரேட்டின் அழகியலை மெருகேற்றுவதோடு, குடியிருப்பாளர்களின் நல்வாழ்வையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்தும் எனவும் துபாய் முனிசிபாலிட்டி குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக துபாய் முனிசிபாலிட்டியின் டைரக்டர் ஜெனரல் தாவூத் அல் ஹஜ்ரி கூறுகையில், குடியிருப்பாளர்கள் வசிக்கும் குடியிருப்பு வட்டாரங்களில் இதேபோல் 2019 முதல் 2021 வரை 70 பூங்காக்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் 55 கூடுதல் குடும்பப் பூங்காக்களை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இவை அனைத்தும் 93 மில்லியன் திர்ஹம் செலவில் கட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், முனிசிபாலிட்டியின் நான்கு திட்டங்களில் இரண்டு அல் வர்கா 1 மற்றும் 4 ஆகிய வட்டாரங்களில் இன்று முடிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இரண்டிற்கான கட்டுமானப் பணிகள் அல் நஹ்தா 1 மற்றும் ஹோர் அல் அன்ஸ் ஈஸ்ட் ஆகிய இடங்களில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த இரண்டு பூங்காக்களையும் கூடிய விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அல் ஹஜ்ரி கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!