அமீரக செய்திகள்

இந்தியா-UAE விமானப் பயணம் செய்யும் நபர்கள் கவனத்திற்கு: இனி நெய், ஊறுகாய் எல்லாம் கொண்டு போக முடியாது..!! தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் என்ன..??

வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் மற்றும் சுற்றுலா என பல்வேறு நோக்கங்களுக்காக ஏராளமான இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி படை எடுக்கின்றனர். இதன் விளைவாக, இந்தியா-UAE இடையேயான விமானப் போக்குவரத்து எப்போதும் பிஸியாக இருக்கிறது.

முக்கியமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில்  3.5 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசிக்கின்றனர், இது வளைகுடா நாட்டில் வசிக்கும் மிகப்பெரிய வெளிநாட்டவர் சமூகமாகும்.

கூடுதலாக, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையிலும் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில்  உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் முதன்மை வகித்த போது 6 மில்லியன் இந்திய பயணிகள் DXB விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.

தற்போது, பண்டிகை காலம் என்பதால் இரு நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை அதிகளவில் எடுத்துச் செல்வதால், செக்-இன் பேக்கேஜ்கள் நிராகரிக்கப்படும் விகிதத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி பயணத்தின்போது தனை செய்யப்படும் பொருட்களின் விபரங்களைப் பற்றி கீழே காணலாம்.

தடை செய்யப்பட்ட பொருட்களில் சில:

  • காய்ந்த தேங்காய் (கொப்பரை)
  • வானவேடிக்கை
  • எரியக்கூடிய பொருள் (flares)
  • பார்ட்டி பாப்பர்ஸ் (party poppers)
  • தீப்பெட்டிகள்
  • பெயிண்ட்
  • கற்பூரம்
  • நெய்
  • ஊறுகாய்
  • எண்ணெய் உணவு பொருட்கள்
  • இ-சிகரெட்டுகள்
  • லைட்டர்கள்
  • பவர் பேங்க்குகள்
  • ஸ்ப்ரே பாட்டில்கள்

மேற்கூறப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் தவறாகக் கையாளப்படும்போது அல்லது முறையற்ற முறையில் சேமிக்கப்படும்போது விமானப் பாதுகாப்பிற்கு அபாயங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதாவது, இவற்றினால் தீ ஆபத்துகள், வெடிப்புகள் அல்லது விமானத்தின் மின் அமைப்புகளில் குறுக்கீடு போன்ற ஆபத்துகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள்:

கடந்த ஆண்டு ஒரு மாதத்தில் மட்டும் பயணிகளின் செக்-இன் பைகளில் இருந்து மொத்தம் 943 காய்ந்த தேங்காய்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பொதுவாக உலர் தேங்காயில் அதிக அளவு எண்ணெய் இருக்கும், இது விமானத்தின் உள்ளே வெப்பத்தை எதிர்கொண்டால் தீயை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

எனவே, மார்ச் 2022 இல் இந்தியாவின் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அமைப்பு (BCAS) இதை தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. ஆனால், இது பற்றிய விழிப்புணர்வு இன்னும் பெரும்பாலான பயணிகளுக்கு இல்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.

விமானத்தில் எடுத்துச் செல்வதற்கு ஆபத்தான பொருட்களைப் பற்றி பயணிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதது கூட செக்-இன் பைகளில் நிராகரிப்பு விகிதம் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்றும், இது தொடர்பாக விமான நிறுவனங்கள் வழங்கும் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்களை அறிந்துகொள்வதற்கும், புரிந்துகொள்வதற்கும் பயணிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

செக்-இன் பேக்கேஜ் ஸ்கிரீனிங்:

விமான நிலையத்தில் ஸ்கிரீனிங் செய்யப்பட்ட பைகளின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது நிராகரிக்கப்பட்ட செக்-இன் பைகளின் விகிதம், டிசம்பர் 2022 இல் 0.31 சதவீதமாக இருந்ததாகவும் இது கடந்த மே மாதத்தில் 0.73 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனவே விமானத்தில் பயணம் செய்யும் நபர்கள் இது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்வதை தவிர்ப்பதன் மூலம் சுமூகமான பயணத்தை எதிர்கொள்ளலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!