அமீரக செய்திகள்

துபாயில் சொத்துக்களை வாங்கி குவிப்பதில் மீண்டும் இந்தியர்கள் முதலிடம்.. ஆய்வறிக்கை வெளியீடு..!!

நடப்பு ஆண்டான 2023ன் இரண்டாவது காலாண்டில் துபாயின் ரியல் எஸ்டேட் சந்தையின் சிறந்த முதலீட்டாளர்களின் பட்டியலில் இந்தியர்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். இதே ஆண்டின் முதல் காலாண்டில் இங்கிலாந்து நாட்டவர்கள் முதல் இடத்தை பிடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியர்கள் முதல் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

துபாயில் அதிக சொத்துக்களை வாங்கி குவிப்பவர்கள் குறித்த ஆய்வுகளை நடத்தி, சொத்து மதிப்பின் அடிப்படையிலான பட்டியலை பெட்டர்ஹோம்ஸ் (Betterhomes) நிறுவனம் வெளியிட்டிருந்தது. அந்த ஆய்வின் முடிவில் இந்தியர்கள் முதலிடமும், இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து நாட்டவர்களும், மூன்றாம் இடத்தில் ரஷ்யர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தொடர்ச்சியாக துபாயின் உள்ளூர் சொத்து சந்தையில் முதன்மை முதலீட்டாளர்களாக தெற்காசிய நாட்டினர்களே இருந்து வருகின்றனர். மேலும், தெற்காசிய நாடுகளில் நிலவும் நிலையற்ற அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக அவர்கள் துபாயில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாகவும் அறிக்கையின் முடிவுகள் தெரிவிக்கிறது.

உலகெங்கிலும் உள்ள வலுவான சர்வதேச தேவையைக் கண்காணிக்கும் துபாயின் ரியல் எஸ்டேட் துறை, மக்கள் எப்போதும் பாதுகாப்பான இருப்பிடம், வரி செலுத்தும் திறன், நேர்மறையான முதலீட்டு வருமானம் போன்றவற்றையே இலக்காக நிர்ணயித்து முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளது.

Covid-19 தொற்று பரவலுக்குப் பின்னர், குறிப்பாக இந்திய துணைக்கண்டம், ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் இருந்து அதிக நெட்- வொர்த் கொண்ட நபர்கள் துபாயை நோக்கி படையெடுத்து வருகின்றனர். எனவே, இந்தாண்டு மட்டும் சுமார் 4,500 கோடீஸ்வரர்களை ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதுபோலவே, உலகெங்கிலும் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 5,200 கோடீஸ்வரர்கள் அமீ்கத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். இது மற்ற நாடுகளில் குடிபெயர்ந்தவர்களை விடவும் அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்களின் இடம்பெயர்வு எனவும் கருதப்படுகிறது.

இதுபோன்ற கோடீஸ்வரர்களின் இடம்பெயர்வு, உள்ளூர் சொத்துக்களுக்கான தேவை மற்றும் விலைகளை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்கிறது. குறிப்பாக, 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து துபாயின் சொத்து மதிப்புகள் விறுவிறுவென உயர்ந்திருப்பதை CBRE தரவுகளில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் அமீரகத்திற்கு இடம் பெயர்ந்ததன் காரணமாக, ஜூன் 2023 வரையிலான நடப்பு ஆண்டில் ரியல் எஸ்டேட் துறையில் 16.9 சதவிகிதம் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த வளர்ச்சி விகிதம் மே மாதம் 15.9 சதவிகிதமாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே காலகட்டத்தில், நாட்டில் சராசரி அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை 17.2 சதவீதமும், சராசரி் ஆடம்பர வில்லாகளின் விலை 15.1 சதவீதமும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தியா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவைத் தவிர, எகிப்து, அமீரகம், துருக்கி, பாகிஸ்தான், இத்தாலி, லெபனான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் முதல் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளனர் என்றும் பெட்டர்ஹோம்ஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!