அமீரக செய்திகள்

அமீரகத்தில் தொழிலாளர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய சட்டம் தீர்மானம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய ஆணையை திங்களன்று மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி, மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் உத்தரவின் அடிப்படையில் இயற்றப்படுவதாக கூறப்படுகின்றது. இந்த சட்டம் பகுதி நேர மற்றும் தற்காலிக வேலை உட்பட பல்வேறு பணி வகைகளை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் அதிக தொழிலாளர் பாதுகாப்பை வழங்குவதையும் நோக்கமாக கொண்டிருக்கின்றது.

தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணைச் சட்டம் எண் 33 இல் கூறியுள்ள இந்த சட்டம் குறித்த தகவலை திங்கள்கிழமை துபாயில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் அவார் அறிவித்துள்ளார். புதிய சட்டம் பிப்ரவரி 2, 2022 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் இயற்றப்படுவதன் மூலம், நாட்டில் தொழிலாளர் உறவுகள் மிகவும் நெகிழ்வானதாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் அவார் புதிய சட்டம் ஊழியர்களுக்கு கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக ஆவணங்களைக் கைப்பற்றுவதில் இருந்து கூடுதல் பாதுகாப்பை வழங்க முற்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் எமிராட்டி பணியாளர்களின் பங்கேற்பு மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் தொழிலாளர் சந்தையில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இந்தச் சட்டம் துணைபுரிகிறது என்று அல் அவார் கூறியுள்ளார்.

ப்ரொபேஷன் பீரியட் ஆறு மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

தொழிலாளர்களின் உத்தியோகபூர்வ ஆவணங்களை சட்டவிரோதமாக கைப்பற்றுவதை இந்த சட்டம் தடை செய்கிறது. ஒரு வணிக நிறுவனத்தில் இருந்து மற்றொரு வணிக நிறுவனத்திற்குச் செல்ல அனுமதிக்கும் இந்த சட்டம் அமலில் உள்ள சட்டத்தின் படி அல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக, வேலைக் காலத்தின் முடிவில் நாட்டை விட்டு வெளியேறுமாறு முதலாளிகள் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது.

நிர்வாக விதிமுறைகளால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப ஒரு பணியாளருக்கான ப்ரொபேஷன் பீரியட் என்று சொல்லக்கூடிய வேலை பார்ப்பதற்கு தகுதி வாய்ந்தவரா என்பதை சோதிக்கும் காலம் ஆறு மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வழக்கின் அனைத்து நிலைகளிலும் தொழிலாளர் வழக்குகளுக்கு நீதித்துறை கட்டணத்தில் இருந்து இந்த சட்டத்தின்படி விலக்கு அளிக்கபடுகிறது.

போட்டித்திறன் மற்றும் உற்பத்தித்திறனை ஊக்குவித்தல்

நாட்டில் தொழிலாளர் சந்தையின் நெகிழ்வுத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதையும், தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதையும் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அல் அவார் வலியுறுத்தினார்.

புதிய சட்டம் வணிகத்தை எளிதாக்கும், தொழிலாளர் சந்தையின் போட்டித்தன்மை மற்றும் உற்பத்தித்திறனை ஊக்குவிக்கும் என கூறப்படுகிறது.

அத்துடன் இந்த புதிய ஆணை தொழிலாளி, முதலாளி ஆகிய இரு தரப்பினருக்கும் ஒரு ஒப்பந்தத்திற்கான உரிமைகளை சமநிலையான முறையில் இருவருக்கும் உத்தரவாதம் செய்கிறது மற்றும் இரு தரப்பினருக்கும் பாதுகாப்பை வழங்குகிறது, இதனால் அவர்கள் தங்களுக்கான உரிமைகளை எளிதில் அணுகவும் கோரவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!