அமீரக செய்திகள்

அமீரகம், இந்தியா இடையே விமான டிக்கெட்டுகளின் விலை இரு மடங்கு அதிகரிப்பு..!! காரணம் என்ன..??

துபாய் மற்றும் இந்தியாவிற்கு இடையே பயணம் செய்வதற்கான விமானக் கட்டணம் டிசம்பர் மாதத்தில் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் உள்ள ஏராளமான குடியிருப்பாளர்கள் பள்ளி விடுமுறைக்காக சொந்த ஊர் செல்ல விரும்புவது, எக்ஸ்போ 2020 மற்றும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் போன்ற மெகா நிகழ்வுகளுக்கு அமீரகத்திற்கு வர விரும்பும் பயணிகளின் வலுவான வருகை காரணமாக இந்த டிக்கெட் விலையானது உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் ஏர்பபுள் ஒப்பந்தங்களுக்குப் பிறகு குறைவான விமான சேவை போன்றவை காரணமாகவும் எப்போதும் பிஸியாக இருக்கும் இந்திய வழித்தடங்களுக்கான விமானக் கட்டணங்கள் வரும் சில மாதங்களில் அதிகமாக இருக்கும் என்று பயணத் துறை நிர்வாகிகள் நம்புகின்றனர்.

இது குறித்து Musafir.com இன் தலைமை செயல்பாட்டு அதிகாரி ரஹீஷ் பாபு கூறுகையில், “பல குடியிருப்பாளர்கள் ஜூலை மாதத்தில் விடுமுறையில் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல முடியவில்லை. தற்பொழுது அமீரகத்தில் குளிர்கால சீசன் துவங்கியிருப்பதால் இந்த சிறந்த காலநிலை காரணமாக அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அமீரகம் அழைத்து வர விரும்புகிறார்கள்”.

“இந்தியாவில் இருந்து துபாய்க்கு வரும் விமானத்திற்கான ஒரு வழிக் கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது. இரண்டாவதாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் குழுக்களும் துபாய்க்கு வர தொடங்கியுள்ளன. கடந்த அக்டோபர் மாதம் வரை துபாய் வர தயக்கம் இருந்த நிலையில் இப்போது இந்தியாவில் இருந்து கார்ப்பரேட் வாடிக்கையாளர்களின் ஊழியர்கள் மற்றும் பார்ட்னர்கள் பயணம் அதிகரித்து வருகிறது. இந்த எல்லா காரணிகளாலும், டிக்கெட் கட்டணம் அதிகமாக உள்ளன” என்று கூறியுள்ளார்.

மேலும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பல குடும்பங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு இந்தியா சென்று விடுமுறை முடிந்த பின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்ப நினைப்பதால், சில விமானங்களில் பயணிக்க விமானக் கட்டணம் டிசம்பரில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம், விமான நிறுவனங்கள் தங்கள் விமான இருக்கைகளில் 100 சதவீத திறனைப் பெறவில்லை. மறுபுறம், தொற்றுநோய்க்குப் பிறகு பல குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்லவில்லை. எனவே பயண தேவை படிப்படியாக அதிகரித்து வருகிறது, அத்துடன் இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை நீடிப்பதாலும் ஏர் பபுள் ஒப்பந்தத்தினாலும் விமான சேவைகள் இன்னும் குறைவாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

விமான சேவைகளின் தேவை அதிகரிப்பு மற்றும் விமானங்களின் பற்றாக்குறைக்கு மத்தியில், டிசம்பரில் ஏற்கனவே பல விமானங்களின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக பயணத் துறை நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் டிசம்பர் மாத்ததில் இரு நாடுகளுக்கும் இடையே விமான சேவை மிகவும் பிஸியாக இருக்கும். ஏனென்றால் பலர் எக்ஸ்போ மற்றும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலிற்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வர காத்துள்ளனர், மேலும் பல குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்புகிறார்கள். கூடுதலாக, குளிர்காலம் அமீரகத்திற்கு அதிகளவிலான சுற்றுலாவாசிகள் வருவதற்கு ஏற்ற பருவமாகும். எனவே, இவையே விமானக் கட்டணங்கள் அதிகரிப்பதற்குக் காரணம் என்றும் இதனால் அடுத்த சில மாதங்களில் விமானக் கட்டணங்கள் உயர்வாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

விமான நிறுவனங்கள் தங்கள் திறனை விரிவுபடுத்தாவிட்டால் எக்ஸ்போ 2020 முடியும் வரை கட்டணங்கள் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!