இந்திய செய்திகள்

இந்தியா: சர்வதேச பயணிகளுக்காக மீண்டும் நடைமுறைக்கு வருகிறதா “ஏர் சுவிதா”..??

கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் மட்டுப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக சீனா மற்றும் பிற நாடுகளில் புதிய மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு ‘ஏர் சுவிதா’ படிவங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இந்திய சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன் நடத்தப்பட்ட RT-PCR சோதனையின் விவரங்கள் அல்லது முழுமையான தடுப்பூசி ஆதாரத்தை பயணிகள் வழங்க வேண்டும் என்றும் சில வாரங்கள் நிலைமையை கண்காணித்த பிறகே இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா மற்றும் வேறு சில நாடுகளில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நாட்டின் கொரோனாவிற்கான நிலைமையை மறுஆய்வு செய்ய புதன்கிழமை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளின் 2% என்பதன் படி பயணிகளின் சீரற்ற சோதனை மாதிரியை இந்தியா ஏற்கனவே மேற்கொள்ள தொடங்கியுள்ளது. சீனா மற்றும் பிற நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோய்த்தொற்று பதிவாகும் பயணிகளுக்கு பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன் நடத்தப்பட்ட RT-PCR சோதனை அல்லது முழுமையான தடுப்பூசி ஆதாரத்துடன் சர்வதேச வருகையாளர்களுக்கான கட்டாய ‘ஏர் சுவிதா’ படிவங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.

இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் “உலகளவில் அதிகரித்து வரும் நோய்த்தொற்றைக் கருத்தில் கொண்டு ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சில வாரங்களுக்கு நாட்டில் கொரோனா நிலைமையைக் கண்காணித்த பின்னரே இது தொடர்பான முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய சுகாதார அமைச்சர் கூறுகையில்  “கொரோனா இன்னும் முடிவடையவில்லை. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அனைவரையும் நான் அறிவுறுத்தியுள்ளேன். எந்தச் சூழலையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று மாண்டவியா தெரிவித்துள்ளார். 

சீனாவின் தற்போதைய கொரோனா தொற்றுகளின் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கும் Omicron வகை வைரஸானது மூன்று பேருக்கு பாதித்துள்ளதாக இதுவரை இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

நிபுணர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த சந்திப்பின் போது, ​​உலகளாவிய கொரோனா நிலைமை மற்றும் உள்நாட்டு சூழ்நிலை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தெர்மல் ஸ்கிரீனிங் நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Back to top button
error: Content is protected !!