அமீரக செய்திகள்

அமீரகத்தில் உச்சகட்ட வெப்பநிலையை எட்டும் கோடை காலம்!! – நோய்கள் பரவ வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை…

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நாட்டில் வெப்பநிலை 50 ° C ஐ நோக்கி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதில் நேற்றைய முன்தினம் திங்கட்கிழமை அன்று அதிகபட்சமாக 49.1 ° C வரை அமீரகத்தில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாட்டில் தொடர்ச்சியாக 45°Cக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதிகபட்ச வெப்பத்தின் விளைவாக வெப்பத் தடிப்புகள், பிடிப்புகள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் சமீப நாட்களில் படிப்படியாக அதிகரித்துள்ளதாக அமீரகத்தில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய இக்கட்டான சூழலில், கோடை வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும், வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து விழிப்புடன் இருப்பதும் அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், உச்சத்தை நோக்கி நகரும் வெப்பநிலையின் தாக்கத்தினால், பெரும்பாலும் திறந்த வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் குறிப்பாக குழந்தைகள் பெருமளவில் வெப்ப சொறி, வெப்ப பிடிப்புகள் மற்றும் வெப்ப சோர்வு போன்ற நோயினால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அடிக்கடி தண்ணீரைப் பருகுதல்:

கொளுத்தும் கோடைகாலத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தினசரி பருகும் நீரின் அளவை குறைந்தபட்சம் 500 முதல் 1000 மிலி வரை அதிகரிப்பது சிறந்தது என்றும், அதிலும் குளிர் பானங்கள் மற்றும் மென்மையான உணவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

குறிப்பாக, கோடைகாலங்களில் இலேசான ஆடைகளை அணிவது, உடல் வெப்பநிலையை சீராக்க குறைந்த அளவில் உணவை உட்கொள்ளுவது மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிப்பது போன்றவற்றைத் தவறாமல் கடைபிடித்தால் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

வெப்பமான காலம்:

தற்போது, நாட்டில் ‘Dor Al Ashar’ என்றழைக்கப்படும் காலம் தொடங்கியுள்ளதாகவும், இது பழங்கால அரபு காலண்டரில் ட்ரூர் (Drour) என்று அழைக்கப்படும் ‘Qiyed’ என்பதைக் குறிப்பதாகவும் புயல் மையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. பொதுவாக இந்த காலகட்டத்தில் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் விகிதங்கள் உயரும்.

அதாவது, ‘Qiyed’ என்பது உச்ச வெப்பத்தை கொண்ட கோடைகாலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும். மேலும், இது அரேபிய தீபகற்பத்தில் வெப்பமான காலகட்டமான ‘ஜம்ரத் அல் கியேத்’ என்ற உச்சகட்ட வெப்பநிலையை அடைகிறது. பெரும்பாலும் கடுமையான வெப்பம், கடுமையான வறட்சி, சூடான காற்று போன்றவற்றால் வகைப்படுத்தப்படும் இந்த காலநிலை ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

வெப்பத்தினால் ஏற்படும் நோய்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்:

— கோடைகாலம் என்றாலே அடிக்கடி சந்திக்கும் நோய்கள் வெப்ப சொறி மற்றும் வெப்ப பிடிப்புகள் ஆகும். இவற்றில் வெப்ப சொறியானது மிகவும் தொந்தரவானதாக இருக்கும், இது முதலில் அதிகப்படியான வியர்வையால் தோல் எரிச்சலாக வெளிப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், சொறி தொற்று ஏற்படலாம். இதைத் தவிர்க்க ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிப்பது நல்லது, மேலும் இதற்கு கேலமைன் லோஷன் போன்ற தோல் பாதுகாப்பு லோஷன்களைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

— இதேபோல், கோடை காலங்களில் அதிகமாக சூரியக் கதிர்வீச்சு வெளிப்படுவதால் தோலில் கொப்புளங்கள் ஏற்படும் மற்றொரு சருமச் சிக்கல் இருப்பதாகவும் மருத்துவர்கள் விளக்குகின்றனர். எனவே, வெளியே செல்லும் போது குடைகள், SPF பாதுகாப்புடன் கூடிய சன்ஸ்கிரீன் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் இதைத் தடுக்கலாம்.

— இவற்றுடன் மற்றொரு வெப்ப வெளிப்பாடான வெப்பப் பிடிப்புகள் வெப்பம் தொடர்பான நோய்களில் கொஞ்சம் தீவிரமானவை. ஏனெனில், இது நோயாளி வெப்ப பக்கவாதம் உள்ளிட்ட சிக்கலை நோக்கிச் செல்கிறார் என்பதற்கான முதல்கட்ட அறிகுறியாக இருக்கலாம். அத்தகைய தீவிரமான நோயைத் தவிர்க்க எலக்ட்ரோலைட்கள், குறிப்பாக சோடியம் மற்றும் பொட்டாசியம் கொண்ட பானங்கள், குறிப்பாக பழச்சாறுகள் போன்றவற்றை அதிகளவில் உட்கொள்ளலாம்.

வெப்ப பிடிப்பின் அறிகுறிகள்:

பொதுவாக வெப்பப் பிடிப்பின் அறிகுறிகளை அனுபவிக்கும் நோயாளிகள் மயக்கத்தை அனுபவிப்பார்கள். அவ்வாறு இருக்கையில், அவர்கள் அதிகளவில் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். மேலும், பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும், ஏனெனில் இது வெப்ப சோர்வு அல்லது இதய பக்கவாதத்திற்கான ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, ஹீட் ஸ்ட்ரோக் என்பது எந்நேரத்திலும் உயிருக்கு ஆபத்தானதாக மாறலாம் என்றும், இதனால் பொதுமக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!