இந்திய செய்திகள்

ஐந்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு PCR சோதனை கட்டாயம்..!! இந்திய அரசு அறிவிப்பு..!!

கொரோனாவின் புதிய மாறுபட்ட ஓமிக்ரான் வகை வைரஸ் தற்போது உலகின் சில நாடுகளில் வேகமாக பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இந்திய அரசு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த நோய்த்தொற்று அதிகம் பாதித்துள்ள குறிப்பிட்ட ஐந்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு PCR சோதனையை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இது பற்றி இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவிக்கையில் கொரோனாவின் புதிய வகை வைரஸ் அதிகம் பரவியுள்ள நாடுகளாக கண்டறியப்பட்டுள்ள ஐந்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு RT-PCR சோதனை கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்த சோதனை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் சோதனையில் நேர்மறை முடிவைப் பெற்றால் அல்லது கொரோனாவிற்கான அறிகுறிகளைக் காட்டினால், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்கூறிய நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகள் தற்போதைய சுகாதார நிலையை அறிவிக்க ஏர் சுவிதா படிவத்தை நிரப்புவது கட்டாயமாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை, நாட்டிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட கொரோனா வழிகாட்டுதல்களை இந்தியா வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்கள் இன்று காலை 10 மணி IST (8.30 UAE) முதல் அமலுக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையை கருத்தில் கொண்டு புதிய வழிகாட்டுதல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று நாட்டின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பிக்கப்பட்ட நெறிமுறையானது, விமானத்தில் பயணிக்கும் பயணிகளில் இரண்டு சதவீதத்தினர் கொரோனாவிற்கான சீரற்ற சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை விளக்குகிறது. கூடுதலாக, பயணத்தின் போது கொரோனாவிற்கான அறிகுறிகளைக் கொண்ட பயணிகள் நிலையான நெறிமுறையின்படி தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சீரற்ற சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், வருகையின் போது அல்லது வருகைக்குப் பிந்தைய சுய கண்காணிப்பு காலத்தின் போது கொரோனாவிற்கான அறிகுறி கண்டறியப்பட்டால், அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அரசு நெறிமுறையின்படி சிகிச்சையளிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!