துபாயில் பெய்த கனமழை… சாலைகள் மூடல்.. மாற்று வழிகளை அறிவித்த RTA..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வாகன ஓட்டிகளுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, துபாயில் பெய்து வரும் கனமழையால் குறிப்பிட்ட சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும் தண்ணீர் தேங்கியுள்ள சாலைகள் மூடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
RTA வெளியிட்டுள்ள விவரங்களின்படி, அல் சப்கா சுரங்கப்பாதை தற்பொழுது திறக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சுரங்கப்பாதை இரு திசைகளிலும் மூடப்பட்டு அதற்கு மேலே உள்ள போக்குவரத்து விளக்கு சந்திப்புக்கு (traffic light intersection) போக்குவரத்து திருப்பிவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது ஷேக் சயீத் சாலை, அல் கைல் ஸ்ட்ரீட் அல்லது அல் யலாயிஸ் ஆகிய மாற்று வழிகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்துமாறு RTA தெரிவித்துள்ளது.
மேலும் அல் அசாயல் ஸ்ட்ரீட் மற்றும் லதிஃபா பின்த் ஹம்தான் ஸ்ட்ரீட்டின் இன்டர்செக்ஷன் இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் ஃபர்ஸ்ட் அல் கைல் ஸ்ட்ரீட், லதிஃபா பின்த் ஹம்தான் ஸ்ட்ரீட் மற்றும் உம் சுகீம் ஸ்ட்ரீட் போன்ற மாற்றுவழிகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேசமயம், துபாயில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு துபாய் போலீஸ் ஆப் மூலம் விழிப்புணர்வு வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலையில் கனமழையால் ஏற்பட்ட சாலை விபத்துகள் குறித்து எச்சரித்த ஆணையமானது , வாகன ஓட்டிகள் சாலைகளில் விதிகளை பின்பற்றி கவனமாக வாகனம் ஓட்டவேண்டும் என்றும் குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.