அமீரகத்தில் நிலவும் நிலையற்ற வானிலை.. சில பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று பல பகுதிகளில் கன மழை பெய்ததுடன் நிலையற்ற வானிலை நிலவி வந்ததன் காரணமாக சில பள்ளிகளில் வகுப்புகள் நிறுத்தம் செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் அடுத்த இரு நாட்களுக்கும் குறிப்பிட்ட பள்ளிகளில் நேரடி வகுப்புகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவிக்கையில் அமீரகத்தில் அடுத்து வரும் நாட்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து ராஸ் அல் கைமாவில் உள்ள அரசுப் பள்ளிகள் மாணவர்களுக்கு தொலைநிலைக்கற்றலை அறிவித்துள்ளன. அதன்படி, ஜனவரி 26 மற்றும் 27 ஆம் தேதியன்று மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே பாடங்களை கற்கலாம் என்று ராஸ் அல் கைமாவின் உள்ளூர் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
ராஸ் அல் கைமா காவல்துறை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவின்படி, பள்ளிகளின் இந்த நடவடிக்கையானது மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன், இன்று மதியம் 12 மணியளவில் ஷார்ஜாவின் கல்பா நகரம் மற்றும் ஃபுஜைராவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கனமழை காரணமாக மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு வாகன ஓட்டிகள் கவனமாக சாலைகளில் வாகனங்களை ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை, இடியுடன் கூடிய சாரல் மழை மற்றும் ஆங்காங்கே ஆலங்கட்டி மழை பெய்யும் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த சீரற்ற வானிலை நாளையும் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.