கடலில் மூழ்கிய மனைவி.. காப்பாற்ற சென்ற கணவர் உயிரிழப்பு.. அமீரகத்தில் நிகழ்ந்த சோக சம்பவம்..

கடல் நீரில் மூழ்கிய தனது மனைவியை காப்பாற்ற முனைந்த கணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று அமீரகத்தில் நிகழ்ந்துள்ளது. அமீரகத்தில் இருக்கும் அல் மம்சார் பீச்சில் இந்நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜா சிவில் டிஃபென்ஸ் மற்றும் ஷார்ஜா காவல்துறையின் மீட்புக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு நீரில் மூழ்கிய இருவரில் அந்த பெண்ணைக் காப்பாற்றினர் என்றும் பின்னர் சிறப்பு குழுக்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர் அவரது கணவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஞாயிற்றுக்கிழமை மாலை (ஜனவரி 22) மத்திய செயல்பாட்டு அறைக்கு ஒரு அரபு நபர் அல் மம்சார் பீச்சில் ஒரு ஆசிய நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் நீரில் மூழ்கியதாக புகார் தெரிவித்திருக்கிறார். அந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில் ஷார்ஜாவின் மீட்புக் குழுக்கள் மற்றும் போலீஸ் ரோந்துகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குழுவின் முயற்சியால் நீரில் மூழ்கிய இருவரில் மனைவி பாதுகாப்பாக காப்பாற்றப்பட்ட நிலையில், பாதுகாப்பு குழுக்களின் தீவிர தேடலில் நீரில் மூழ்கிய கணவரின் சடலம் சிறிது நேரம் கழித்து கடலில் இருந்து அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அவரை உயிர்ப்பிக்க பல வகைகளில் முயன்றும் முதலுதவி அளித்தும் அவர் பதிலளிக்கவில்லை என்று கூறப்பட்டதுடன் நீரில் மூழ்கி மனைவியைக் காப்பாற்ற முயன்றபோது அவர் உயிரிழந்திருக்கிறார் என்பது பின்னர் தெரியவந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இறந்தவரின் மரணத்திற்கான சூழ்நிலை குறித்து ஷார்ஜா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நிலையற்ற வானிலையின் போது கடலில் நீந்துவதைத் தவிர்க்கவும், பொது பாதுகாப்பைப் பாதுகாக்க நாட்டிலுள்ள திறமையான அதிகாரிகளால் வழங்கப்பட்ட உத்தரவுகளைப் பின்பற்றவும் மீட்பு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்கவும், நியமிக்கப்பட்ட பகுதிகளில் நீச்சல் பயிற்சி செய்யவும், வழிகாட்டுதல் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ள கடல் நீரோட்டப் பகுதிகளில் இருந்து விலகி இருக்கவும், இரவு நேரம் போன்ற தடைசெய்யப்பட்ட நேரங்களில் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும், ஆய்வாளர்கள் மற்றும் மீட்புக் குழுக்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்ததக்கது.