இது பனிப்பிரதேசம் அல்ல.. குளிரால் உறைந்திருக்கும் பாலைவனம்.. சமூக வலைதளங்களில் வைரலான ஓமானின் மலைப்பகுதி..!!

வளைகுடா நாடுகளில் தற்பொழுது குளிர்காலம் என்பதால் அவ்வப்போது மழையும் குளிரான வானிலையும் அனைத்து நாடுகளிலும் நிலவி வருகிறது. சில சமயங்களில் இந்த நாடுகளின் உயரமான மலைப்பகுதிகளில் பனிப்பொழிவும் ஏற்பட்டு குளிரான வானிலையின் காரணமாக மரங்கள், செடிகள் என அனைத்தும் பசுமையாக காட்சியளித்து பாலைவனங்களை சோலைவனங்களாக மாற்றியுள்ளன.
இந்த நிலையில் ஓமானில் இருக்கக்கூடிய ஒரு மலையை பனி மூடியதால், அப்பகுதியானது ஆர்க்டிக்கில் உள்ள ஒரு பனிப்பிரதேசம் போன்று காட்சியளிக்கின்றது. இந்த பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஓமானில் இருக்கும் உயரமான மலையான ஜபெல் ஷம்ஸில் இந்த பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இங்கு பூஜ்ஜியத்திற்கு கீழ் வெப்பநிலை குறைவதால் பனியில் விளையாடும் சாகசக்காரர்கள் மலைக்கு வரத் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே போன்று ஓமானின் மற்ற பகுதிகளிலும் வெப்பநிலை மிகவும் குறைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜபெல் ஷம்ஸில் திங்கள்கிழமை மாலை முதல் மலையில் பனி பெய்யத் தொடங்கியதாகவும் அது இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போன்று கூகுளின் வானிலை தளம் மலையில் இன்று காலை 9.30 மணியளவில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்து, இது -1 டிகிரி செல்சியஸ் வரை கூட குறையலாம் என்றும் கணித்திருந்தது.
இந்நிலையில் காலையில் சமூக ஊடகங்களில் பரவிய ஒரு வீடியோ கிளிப்பில் இங்கு வெப்பநிலை -0.3 டிகிரி செல்சியஸ் நிலவியதாக காட்டப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை அதிகாரி ஒருவர் கூறுகையில் அல் தகிலியாவில் உள்ள ஜெபல் ஷம்ஸில் வெப்பநிலை -1°C மற்றும் அதிக ஈரப்பதம் பதிவாகியதன் காரணமாக இது திங்கட்கிழமை மாலை உறைபனிக்கு வழிவகுத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
ஓமானின் மிக உயரமான மலைகளில் ஒன்றான ஜபெல் ஷாம்ஸ், நாட்டின் சிறந்த சுற்றுலாத் தலமாகும், இது 1,000 மீட்டர் ஆழமான செங்குத்து பாறைகளைக் கொண்ட ‘கிராண்ட் கேன்யன் ஆஃப் அரேபியாவின்’ கண்கவர் காட்சியை வழங்குகிறது. இந்த மலைச்சிகரமானது புகைப்படம் எடுத்தல், நடைபயணம் மற்றும் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.