அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் 50,000 திர்ஹம்ஸ் வரை போக்குவரத்து அபராதம்.. வாகன ஓட்டிகள் புரியும் முக்கிய 8 சாலை விதிமீறல்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளையும் வாகனங்களையும் சாலைகளில் பொருத்தப்பட்டிருக்கும் ரேடார் மூலம் கண்டறியும் நடைமுறையானது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த ரேடாரின் மூலம் அதிவேகமாக செல்லக்கூடிய வாகனங்களை மட்டுமே கண்டறிய முடியும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த ரேடாரில் இருக்கும் அதிநவீன தொழில்நுட்பத்தினால் சீட் பெல்ட் போடாதவர்கள், வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் போன்ற பல்வேறு குற்றங்களையும் கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சில விதிமீறல்களுக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றில் சில வாகனங்கள் பொது ஏலத்தில் கூட விற்கப்படலாம்.

இது போன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுவாக அபராதம் விதிக்கப்படும் 8 முக்கிய போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த விபரங்களை கீழே காணலாம்.

1. வேகம்:

ரேடார்களால் கண்டறியக்கூடிய முக்கிய போக்குவரத்து குற்றங்களில் ஒன்று வேகமாகும். அமீரகத்தில் அபுதாபியை தவிர மற்ற அனைத்து எமிரேட்களிலும், சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பிற்கு மேல் மணிக்கு 20 கிமீ வேகத்தில் ரேடார்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது 100kmph சாலையில், ஒரு வாகன ஓட்டி 121kmph அல்லது அதற்கு மேல் பயணித்தால், ரேடார் வேக மீறலைப் பதிவு செய்யும். அதுவே அபுதாபி எமிரேட்டாக இருந்தால் மட்டும் 100kmph சாலையில், 101kmph வேகத்தில் சென்றால் கூட ரேடார் வேக மீறலைப் பதிவு செய்யும்.

அதுமட்டுமல்லாது ஒரு வாகன ஓட்டுநர் வரம்பை மீறி எவ்வளவு வேகமாகச் செல்கிறார் என்பதைப் பொறுத்து, அதிவேகமாக வாகனம் ஓட்டுவதற்கான போக்குவரத்து அபராதம் 300 திர்ஹம்ஸ் முதல் 3,000 திர்ஹம்ஸ் வரை இருக்கும்.

அமீரக போக்குவரத்து சட்டத்தின்படி, சாலையில் குறிப்பிட்டுள்ள வேக வரம்பை மீறி 80 கிமீக்கும் கூடுதலான வேகத்தில் செல்பவர்களுக்கு 23 ப்ளாக் பாய்ண்ட்ஸ் உடன் அவர்களின் வாகனம் 60 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.

2. வாகன பதிவு காலாவதியான வாகனங்கள்:

அமீரகத்தின் ஃபெடரல் போக்குவரத்து விதிமுறைகளின்படி, காலாவதியான வாகனப்பதிவை (expired vehicle registration) கொண்ட வாகனத்தை ஓட்டுவது 500 திர்ஹம் அபராதத்திற்கு வழிவகுப்பதுடன் 4 ப்ளாக் பாய்ண்ட்ஸும் விதிக்கப்படும். மேலும், வாகன ரிஜிஸ்டரேஷன் காலாவதியாகி மூன்று மாதங்களுக்கு மேல் கடந்து விட்டால் ஏழு நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

3. இரைச்சலான வாகனங்கள்:

சில வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் வேகத்தை அதிகரிக்க சட்டவிரோதமாக தங்கள் வாகனங்களை மாற்றுகின்றனர். இவ்வாறு மாற்றியமைக்கப்படும் வாகனங்கள் கடும் இரைச்சலை உருவாக்குகின்றன.

இதன் காரணமாக இரைச்சலை எழுப்பும் வாகனங்களைக் கண்டறியும் ரேடார் ஒன்றை ஷார்ஜா காவல்துறை அமைத்துள்ளது. சோலார் தொழில்நுட்பத்தால் இயங்கும் இந்த ரேடார், ஒரே சாலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சத்தம் எழுப்பினால் (பந்தயத்தைக் குறிக்கும்- car racing) இது காவல்துறைக்கு எச்சரிக்கையை அனுப்புகிறது.

அதே போல் 95 டெசிபலுக்கு மேல் ஒலியை வெளியிடும் வாகனங்களுக்கு 2,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். ஃபெடரல் போக்குவரத்துச் சட்டத்தின்படி இரைச்சலுடன் வாகனத்தை ஓட்டுவதற்கு 12 பிளாக் பாயிண்டுகள் விதிக்கப்படும்.

4. வாகனம் ஓட்டும்போது தொலைபேசிகளைப் பயன்படுத்துதல்

வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளைக் கண்டறிய அபுதாபி காவல்துறையில் தானியங்கி அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) மூலம் இயங்கும் கேமராக்கள் மூலம் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களைப் பிடிக்கின்றன. வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்தினால் அந்த வாகன ஓட்டிக்கு 800 திர்ஹம் அபராதம் மற்றும் 4 பிளாக் பாயிண்ட் விதிக்கப்படும்.

5. சீட் பெல்ட் அணியாமல் இருத்தல்

வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் 400 திர்ஹம் அபராதம் மற்றும் 4 ப்ளாக் பாய்ண்ட்ஸ் விதிக்கப்படும்.

6. டெயில்கேட்டிங்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு சில ரேடார்கள் மூலம், சாலைகளில் முன் செல்லும் வாகனங்களில் இருந்து போதிய தூரத்தை கடைபிடிக்காமல் டெயில்கேட்டிங் செய்யும் வாகனங்கள் கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகின்றன. இந்த போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிய உம் அல் குவைன் காவல்துறை கடந்த ஆண்டு ரேடார்களை இயக்கியது. அபுதாபி காவல்துறை ஏற்கெனவே இதேபோன்ற ஸ்மார்ட் சிஸ்டத்தை அமல்படுத்தியுள்ளது. இவ்வாறு முன்னால் உள்ள வாகனத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தை விட்டு வெளியேறத் தவறினால் வாகன ஓட்டிகளுக்கு 400 திர்ஹம் அபராதம் மற்றும் 4 ப்ளாக் பாய்ண்ட்ஸ் விதிக்கப்படும்.

7. ரெட் சிக்னலின் போது சாலையை கடந்து செல்லுதல்

சிக்னல் இருக்கக்கூடிய சந்திப்புகளில் நிறுவப்பட்டுள்ள ரேடார்கள், ரெட் சிக்னலின் போது சாலையை கடக்கும் கார்களையும், தடைசெய்யப்பட்ட பகுதிகளிலிருந்து தவறான திருப்பம் அல்லது யு-டர்ன் எடுப்பதையும் கூட கண்டறிய முடியும். இதன்படி ரெட் சிக்னலைத் தாண்டியதற்காக 1,000 திர்ஹம்ஸ் அபராதம், 12 ப்ளாக் பாய்ண்ட்ஸ் மற்றும் சம்பந்தப்பட்ட வாகனத்தை 30 நாட்களுக்கு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும்.

8. அங்கீகரிக்கப்படாத சாலைப் பந்தயம்

அமீரகத்தில் அங்கீகரிக்கப்படாத சாலைப் பந்தயங்களில் பங்கேற்றால் 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்

Related Articles

Back to top button
error: Content is protected !!