UAE: சாலையில் தாறுமாறாக வண்டியை ஓட்டிய நபர்.. அதிரடியாக கைது செய்த காவல்துறை..

அபுதாபியில் போக்குவரத்து பாதுகாப்பு விதிகளை மீறி பிறருக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக வாகனத்தை ஓட்டிய ஓட்டுநரை அபுதாபி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாகன ஓட்டுநர் சாலையின் வலப்பக்கத்திலிருந்து வாகனங்களை முந்திச் செல்வதும், முந்திய வாகனங்களிலிருந்து போதுமான இடைவெளியைக் கடைபிடிக்காததும் காவல்துறையின் கண்காணிப்புக் கேமராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வீடியோ கிளிப் ஒன்றினை அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள வீடியோ காட்சிகளின்படி, அந்த பொறுப்பற்ற ஓட்டுநரின் மோசமான நடத்தைகள், மற்ற வாகன ஓட்டிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி அச்சுறுத்தியுள்ளது. மேலும் அந்த ஓட்டுநர் 3 கடுமையான போக்குவரத்து விதிமீறல்களைச் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலையில் ஆபத்தான முறையில் வலது பக்கத்திலிருந்து முந்திச் சென்றால் 600 திர்ஹம் அபராதமும் 6 பிளாக் பாயிண்டுகளும் விதிக்கப்படும் என்றும் அடுத்தபடியாக, சாலையின் விளிம்பில் இருந்து முந்திச் செல்வது போன்ற நடத்தையில் ஈடுபட்டால் 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் 6 கருப்பு புள்ளிகளை விதிமீறலுக்கான தண்டனையாகப் பெறுவார்கள் என்றும் அத்துடன் முன் செல்லும் வாகனங்களிலிருந்து போதிய இடைவெளியைக் கடைபிடிக்கவில்லையென்றால் 400 திர்ஹம் அபராதமும் மற்றும் 4 கருப்பு புள்ளிகளும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:
வாகனங்கள் எப்போதும் இடதுபுறத்தில் உள்ள பாதையிலிருந்து முந்திச் செல்ல வேண்டும்
மேலும் சாலைகளில் திடீர் வளைவுகளில் வாகனங்களை திருப்புதல் கூடாது.
மற்ற வாகனங்களுக்கு போக்குவரத்து சைகைகளைப் பயன்படுத்தி வாகனத்தை இயக்க வேண்டும்.
அவசரநிலையின் போது மட்டுமே பயன்படுத்தக்கூடிய road shoulder எனும் சாலை ஓரத்தில் உள்ள பாதையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஆகவே, இது போன்ற போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் வாகனங்களை கவனமாக விதிமுறைகளைப் பின்பற்றி ஓட்ட வேண்டும் என்று ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.