அமீரக செய்திகள்

UAE: இன்டர்செக்‌ஷனில் வேகமாக சென்ற கார்.. மற்ற கார்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து..!! வீடியோவை வெளியிட்ட காவல்துறை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்த வண்ணமே உள்ளனர். இருந்தபோதிலும் ஓட்டுநர்களின் கவனக்குறைவாலும் அஜாக்கிரதையாலும் சாலை விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக அபுதாபி காவல்துறையானது விதிகளை மீறி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களுக்கு தனது சமூக ஊடக பக்கத்தில் எச்சரிக்கை விடுத்து வருகின்றது. அதில் சமீபத்தில் அபுதாபியில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றை தனது சமூக ஊடக பக்கத்தில் அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் ஓட்டுநரின் கவனக்குறைவால் நிகழும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

மேலும், காவல்துறை வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில், சிக்னலில் பச்சை நிற விளக்கை எதிர்நோக்கி அனைத்து வாகனங்களும் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், வெள்ளை நிற செடான் வகை (Sedan) கார் அதிவேகத்தில் சிக்னலை கடக்க முயற்சித்துள்ளது. இதனால் அதிவேகத்தில் வந்த கார் சிக்னலில் நின்று கொண்டிருந்த கார்கள் மீது மோதியுள்ளது.

பின்னர், அந்த கார் சறுக்கிக்கொண்டு சென்று சிக்னலில் நின்றிருந்த மற்றொரு கருப்புநிற செடான் கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சிக்னலைக் கடந்து செல்லும் எண்ணத்துடன் சாலைகளில் இன்டர்செக்‌ஷன்களில் (Intersection) வாகனத்தை அதிவேகத்தில் இயக்குவதை தவிர்க்குமாறு காவல்துறை வாகன ஓட்டிகளை வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்த செயல் சிக்னலில் எதிர்திசையில் வரும் வாகனங்கள் மீது மோதும் அபாயத்தை உண்டாக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளின்படி, இன்டர்செக்‌ஷன்களில் அதிவேகத்தில் சென்றால் குற்றவாளிகளுக்கு 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் 12 டிராஃபிக் பிளாக் பாயிண்டுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு 30 நாட்களுக்கு ஜப்தி செய்யப்படும் என்றும், மீண்டும் வாகனத்தை மீட்க 50,000 திர்ஹம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வாகன ஓட்டிகளின் லைசன்ஸ் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டு, மூன்று மாதங்களுக்குள் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை மீட்டுக் கொள்ளாவிட்டால், அது ஏலத்தில் விற்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல்களின்படி, 2021 ஆம் ஆண்டில் மட்டும் 2,850 வாகன ஓட்டிகளுக்கு அபுதாபி காவல்துறை அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!