துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 1,300 க்கும் மேல் உயர்ந்த பலி எண்ணிக்கை..!!

துருக்கி – சிரியா எல்லைப் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து துருக்கி மற்றும் சிரியாவில் கட்டிடங்கள் இடிந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருந்த நிலையில் தற்பொழுது வரை பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்த சமயத்தில் தற்பொழுது மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் துருக்கியின் தெற்கு பகுதியில் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
துருக்கியின் தெற்கு பகுதியில் பிற்பகல் 2.24 மணிக்கு (அமீரக நேரப்படி) 7.6 ரிக்டர் அளவில் இந்த புதிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300 க்கும் மேலாக உயர்ந்துள்ளதாகவும் 6,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டும் இருக்கின்றது. இந்த நிலையில் மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
துருக்கியில் காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இத்தாலியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் இந்த நூற்றாண்டிலேயே துருக்கி எதிர்கொண்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இது என ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மை நிறுவனம், காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 என்ற அளவுடன் கஹ்ரமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள பசார்சிக் நகரில் மையம் கொண்டிருந்ததாகக் கூறியிருக்கின்றது. இந்த நிலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது அந்நாட்டு மக்களிடையே மிகப்பெரும் பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.