அமீரக செய்திகள்

துபாய்: சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! இனி தனியார் மருத்துவமனைகளும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்கும்…

துபாயில் உள்ள தனியார் துறை மருத்துவமனைகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை துபாய் சுகாதார ஆணையம் (DHA) வெளியிட்டுள்ளது. DHA-வின் அந்த அறிவிப்பின்படி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் சேவையானது தற்போது தனியார் மருத்துவமனைகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சுகாதார ஆணையத்தின் இந்த நடவடிக்கையானது சான்றிதழ் சேவையை குடியிருப்பாளர்கள் எளிதில் பெறுவதை உறுதி செய்யவும், சமூக உறுப்பினர்களின் வசதியை மேம்படுத்தவும் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, துபாயில் உள்ள பொது மருத்துவமனைகள் மட்டுமே இந்த பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் துபாயில் உள்ள அனைத்து தனியார் துறை மருத்துவமனைகளும் இந்த சான்றிதழ்கள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, இனி வாடிக்கையாளர்கள் நேரடிச் சான்றிதழையும் ( Physical Certificate), வேண்டுமெனில் டிஜிட்டல் சான்றிதழையும் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள இந்த சேவையைப் பெறுவதற்கு சில மருத்துவமனைகளின் பட்டியலையும் சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ளது. அவை;

  • ​​HMS மிர்டிஃப் மருத்துவமனை
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மெட்கேர் மருத்துவமனை
  • மெடி க்ளினிக் பார்க்வியூ மருத்துவமனை
  • மெடி க்ளினிக் சிட்டி மருத்துவமனை
  • மெடி க்ளினிக் வெல்கேர் மருத்துவமனை
  • ஜூலேகா மருத்துவமனை

மேலும், இது குறித்து பொது சுகாதாரத் துறையின் இயக்குநர் ஜெனரலின் ஆலோசகரும், செயல் இயக்குநருமான டாக்டர் ரமதான் அல் புளூஷி அவர்கள் கூறுகையில், தனியார் மருத்துவமனைகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் சமூக உறுப்பினர்களுக்கு மிக உயர்ந்த தரமான பராமரிப்பு மற்றும் வசதியை வழங்கவும் அத்துடன் வாடிக்கையாளர்கள் எளிதாக சேவையைப் பெறவும் சேவையை விரிவுபடுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சேவையின் வேகம் மற்றும் கிடைக்கும் தன்மையை அதிகரிப்பதன் மூலம் சேவையின் தரத்தை உயர்த்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!