அமீரக செய்திகள்

துபாய் காவல்துறை எச்சரிக்கை! பொதுமக்களின் கவனத்திற்கு… குளிர்காலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை..

துபாயில் குளிர்காலங்களின் போது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ‘Safe Winter’ என்ற பிரச்சாரத்தை துபாய் காவல்துறையின் போக்குவரத்து மற்றும் மீட்பு பொதுத் துறை (General Department of Transport & Rescue) தொடங்கியுள்ளது. மேலும், குளிர்காலங்களில் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கவும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் காவல்துறை பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் குளிர்காலங்களில், பயணத்தைத் தொடங்குவதற்கு முன், வானிலை முன்னறிவிப்புகளை அதிகாரப்பூர்வ செய்தி ஊடகங்களில் சரிபார்த்துக் கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவற்றில் குறிப்பாக கனமழையின்போது, விபத்துகளைத் தவிர்க்க உரிய அதிகாரிகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம், மழைக்காலத்திற்குத் தயாராகும் விதமாக, வாகனங்களில் பிரேக், டயர் மற்றும் இன்ஜின் நிலை ஆகியவற்றைச் சரிபார்த்து, அவை நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்யுமாறு துபாய் காவல்துறை வலியுறுத்தியுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் பாலைவனத்தில் வாகனம் ஓட்டுவதற்கு முன் டயர்களில் காற்றழுத்தத்தைக் குறைக்கவும், கரடுமுரடான பகுதிகளில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும், ஈரமான சூழ்நிலையில் வேகத்தைக் குறைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் ஈரமான காலநிலையின்போது, மணல் திட்டுகளில் ஆபத்தான சாகசங்களைச் செய்வது, நீர் வழித்தடங்கள் அல்லது பள்ளத்தாக்குகளில் நுழைவது மற்றும் சாலைகளைத் தடுப்பது போன்றவற்றை செய்ய கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதுபோல, தொலைதூர பயணங்களுக்கு தனியாக செல்ல வேண்டாம் என்றும், நடைபயணம் அல்லது முகாமிடுதல் போன்றவற்றிற்கு நன்கு வழி அறிந்தவர்களுடன் செல்லுமாறும் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துபாய் காவல்துறை மேலும் கூறியதாவது, பயணத்திற்கு போதுமான உணவு மற்றும் தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், மின்விளக்குகள், பேட்டரிகள் மற்றும் மொபைல் போன் சார்ஜர்கள் போன்ற தேவையான உபகரணங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்பதையும் குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டியுள்ளது.

அதுமட்டுமின்றி, அவசரநிலை ஏற்படும்பட்சத்தில் 999 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது துபாய் போலீஸ் ஸ்மார்ட் ஆப் மூலம் SOS கோரிக்கையை அனுப்பவும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!