அமீரக செய்திகள்

UAE: வீட்டுப் பணியாளர்களின் கிராஜுட்டி தொகையை ஆன்லைனில் கணக்கிடுவது எப்படி..?

அமீரகத்தை பொறுத்தவரை மற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் கிராஜூட்டி (Gratuity) எனப்படும் தொழிலாளர் தனது வேலையின் முடிவில் பெறும் சேவை ஊதியமானது, அமீரகத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். இருப்பினும் இது குறித்த தெளிவான தகவல்கள் ஒரு சிலருக்கு தெரிவதில்லை.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பான மத்திய ஆணைச் சட்டத்தின்படி, நீங்கள் வீட்டுப்பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தால், உங்கள் வீட்டுப் பணியாளர்கள் ஒப்பந்தத்தின் முடிவில் சரியான கிராஜுட்டி தொகையைப் பெறுவதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். எவ்வாறாயினும், கிராஜுட்டியை யார் செலுத்த வேண்டும், உங்கள் வீட்டுப் பணியாளருக்கு எவ்வளவு கிராஜுட்டி தொகை கிடைக்கும் என்பது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அமீரகத்தின் 2022 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை எண். 9 எனும் சட்டமானது, அமீரகத்தில் ஒரு முதலாளிக்கும் வீட்டுப் பணியாளருக்கும் இடையிலான உறவுகளை நிர்வகிக்கிறது மற்றும் சட்டத்தின் 19 வது பிரிவின்படி, ஒரு தொழிலாளி ஒப்பந்தம் முடியும் வரை அதன் விதிகளை மீறவில்லையென்றால், ஒப்பந்தம் காலாவதியான தேதியிலிருந்து 10 நாட்களுக்குள் முதலாளி அவரது கிராஜூட்டி தொகையை தொழிலாளிக்கு வழங்க வேண்டும்.

வீட்டுப் பணியாளர்களின் கிராஜுட்டி தொகையைக் கணக்கிட மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE) ஆன்லைன் கால்குலேட்டரைக் கொண்டுள்ளது. இது சம்பளம், வருடாந்திர விடுப்பு, பணிக்காலம் மற்றும் ஒப்பந்தம் முடிவடைந்ததற்கான காரணம் போன்ற காரணிகளின் அடிப்படையில் முடிவைத் தீர்மானிக்கிறது.

கிராஜுட்டி கணக்கீடுகள் மற்றும் ஆன்லைன் கால்குலேட்டரை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

கிராஜுட்டியை செலுத்துவது யார் பொறுப்பு?

  • நேரடி வேலைவாய்ப்பு – நீங்கள் நேரடியாக வீட்டுப் பணியாளரை பணியமர்த்தியிருக்கும் பட்சத்தில், கிராஜுட்டி தொகையை செலுத்துவது உங்கள் பொறுப்பு ஆகும்.
  • ஏஜென்சி மூலம் ஆட்சேர்ப்பு – ஏஜென்சி மூலம் பணியமர்த்தியிருந்தால் கிராஜுவிட்டி தொகையை ஆட்சேர்ப்பு நிறுவனம் கையாளும்.

கிராஜுட்டி தொகையை தீர்மானிக்கும் காரணிகள்:

  • அடிப்படை மற்றும் நிகர சம்பளம் (basic and net salary)
  • வேலை புரிந்த காலம் (working period)
  • ஒப்பந்தம் நிறுத்தப்படுவதற்கான காரணம்
  • பயன்படுத்தப்படாத வருடாந்திர விடுப்பு
  • வார இறுதி நாட்களில் கூடுதல் நேர வேலை
  • பணியிட காயங்கள் (ஏதேனும் இருந்தால்)

ஆன்லைன் கிராஜுட்டி கால்குலேட்டரை பயன்படுத்துவது எப்படி?

  1. MOHRE இணையதளத்திற்குச் சென்று – mohre.gov.ae, மெனுவில் உள்ள ’services’ என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ‘Domestic Worker Calculator’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. வேலை காலத்தின் தொடக்க மற்றும் முடிவு தேதியை உள்ளிடவும்.
  3. நிகர மற்றும் அடிப்படை சம்பளத்தை (net and basic salary) உள்ளிடவும்.
  4. வேலையை விட்டு நீங்குவதற்கான (reason for leave) காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்வரும் விருப்பங்களில் ஒன்றை மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்: அவை,
  • ஒப்பந்தம் முடிந்தது
  • காரணமின்றி தொழிலாளி ராஜினாமா செய்தார்
  • ஒப்பந்தத்தை முதலாளி மீறியதால் தொழிலாளி ராஜினாமா செய்தார்
  • தொழிலாளி காரணமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டார்
  • ஒப்பந்தத்தை மீறியதற்காக பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்

5. அடுத்து, பின்வரும் விவரங்களை உள்ளிடவும்:

  • குறிப்பிட்ட காலச் சம்பளம் (specific period salary) – வீட்டுப் பணியாளருக்கு நீங்கள் செலுத்தாத காலம் இருந்தால், அந்த நாட்கள், மாதங்கள் அல்லது வருடத்தை உள்ளிடவும்.
  • வருடாந்திர விடுப்பு சம்பளம் (annual leave salary) – எடுக்கப்படாத விடுப்பின் (unclaimed leave) காலத்தை உள்ளிடவும்.
  • வார இறுதி கொடுப்பனவு (weekend allowance) – வார இறுதி நாட்களில் வீட்டுப் பணியாளர் வேலை செய்த நாட்களை உள்ளிடவும்.
  • வேலையின் போது காயம் – வீட்டுப் பணியாளர் வேலையின் போது காயம் அடைந்திருந்தால், அதற்கான இழப்பீடு சதவீதத்தை (disability percentage) உள்ளிடவும்.

நீங்கள் இந்தத் தகவலை உள்ளிடும்போது, ​​நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த தொகை திரையில் தோன்றும், மேலும் ஏதேனும் கோரப்படாத விடுப்புகள் அல்லது செலுத்தப்படாத சம்பளம் இருந்தால், அதற்கேற்ப கிராஜுவிட்டியும் அதிகரிக்கும். மேற்குறிப்பிட்ட தேவையான அனைத்து விவரங்களையும் நீங்கள் உள்ளிட்டதும், கீழே நீங்கள் பணியாளருக்கு கொடுக்க வேண்டிய மொத்த அலவன்ஸை காண்பீர்கள்.

அதே நேரத்தில் நீங்கள் ஒரு ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் இருந்து ஒரு வீட்டுப் பணியாளரை பணியமர்த்தினால், அந்த வீட்டுப் பணியாளர் ஒப்பந்தத்தை அறிவிப்பின்றி முடித்தாலோ, வேலையைக் கைவிட்டாலோ அல்லது ஒப்பந்தத்தை மீறினாலோ, 2022 இன் அமைச்சரவை தீர்மானம் எண்.106 இன் பிரிவு 6 இன் படி, ஏஜென்சியிடம் இருந்து உங்களது பணத்தை திரும்பப் பெறுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

 

Related Articles

Back to top button
error: Content is protected !!