அமீரக செய்திகள்

துபாய்: 2027ம் ஆண்டுக்குள் அனைத்து டாக்ஸிகளும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றப்படும்… கார்பன் உமிழ்வைக் குறைக்க RTA புதுமுயற்சி!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கார்பன் உமிழ்வினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக 2027ஆம் ஆண்டுக்குள் டாக்ஸிகள் அனைத்தும் 100 சதவீதம் சுற்றுச்சூழலுக்கு உகந்த எலக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) நிர்வாக இயக்குநர்கள் அமைப்பின் இயக்குநர் ஜெனரலும் போர்டு தலைவருமான மேட்டர் அல் டேயர் அவர்கள் கூறுகையில், ஐந்தாண்டுத் திட்டமாக (2023-27) ஆண்டுக்கு 10 சதவிகிதம் என்ற விகிதத்தில், அனைத்து டாக்ஸிகளையும் முழுமையாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 2050 ஆம் ஆண்டிற்குள் உமிழ்வு இல்லாத பொதுப் போக்குவரத்தை உருவாக்குவதற்கான RTAயின் சாலை வரைபடத்துடன் (Maps) இந்தத் திட்டம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இத்திட்டத்திற்கு RTA வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஆணையம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி துபாயில் உள்ள 72 சதவீத டாக்ஸிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களாக போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தினால் மாற்றப்பட்டுள்ளது. அவற்றின் எண்ணிக்கை சுமார் 8,221 ஹைபிரிட் வாகனங்கள் என்றும் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

வழக்கமான வாகனங்களுடன் ஒப்பிடும்போது ஹைப்ரிட் வாகனங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவை என்பதையும் கார்பன் உமிழ்வு, எரிபொருள் நுகர்வு மற்றும் பராமரிப்பு செலவுகள் மற்றும் சத்தத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் என்பதையும் 2008 இல் RTA நடத்திய சோதனையில் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், 2022 ஆம் ஆண்டில் துபாயில் உள்ள டாக்ஸிகள் 105 மில்லியன் பயணங்களைச் செய்து 2 பில்லியன் கிமீக்கு மேல் பயணித்துள்ளன. மேலும், இந்த ஹைப்ரிட் வாகனங்கள் குறைவான விலை, பராமரிப்பு செலவு, காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் வழக்கமான வாகனங்களில் இருப்பதைவிட 50 சதவீதம் குறைவான பிற செலவுகள் போன்றவற்றால் வகைப்படுத்தப்படுவதாக அல் டேயர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், துபாய் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் நேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து 1.50 மணி நேரத்திற்கும் குறைவாகக் குறைத்துள்ளது.

அத்துடன் சமீபகாலமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாற்று முறையாக ஹைட்ரஜன் நிரப்புதல் நிலையங்களின் பரவலாக இருக்கும் காரணத்தால், வருங்காலத்தில் சார்ஜிங் நேரம் தொடர்ந்து குறைக்கப்படும் என்று RTA கூறியுள்ளது. மேலும், துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன் (DTC) 34 சதவீதத்திற்கும் அதிகமான ஹைபிரிட் வாகனங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!