UAE: வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசுபாட்டின் அளவை தொலைவிலிருந்து கணக்கிட புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி எமிரேட்டில் சாலைகளில் செல்லும் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகையால் ஏற்படக்கூடிய மாசுபாட்டின் அளவைக் கண்டறிய புதிய அமைப்பு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அமைப்பில் லேசர் அடிப்படையிலான ரிமோட் சென்சிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அபுதாபி எமிரேட்டின் சாலைகளில் வாகனங்களால் உமிழப்படும் மாசுக்களை தூரத்திலிருந்து அளவிடத் தொடங்கப்படும் என்று அபுதாபி – சுற்றுச்சூழல் நிறுவனம் (EAD) கடந்த வியாழன் அன்று தெரிவித்துள்ளது.
அபுதாபி எமிரேட்டின் இந்தத் திட்டம், 4 எர்த் இன்டலிஜென்ஸ் என்விரோன்மென்டல் கன்சல்டன்சி (4இஐ) மற்றும் ஹேகர் என்விரான்மெண்டல் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
EAD ஆனது அதன் லேசர் அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாலையில் வெளிப்படும் மாசுக்களின் அளவீடுகளை கண்டறியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பு மூன்று வாரங்கள் வரை ஆறு வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டு சோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், EAD ஆனது சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தின் எக்ஸாஸ்ட் பைப்பில் இருந்து வெளிப்படும் பல்வேறு வாயுக்களை துல்லியமாக கண்டறிந்து அளவிட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இது வாகனத்தின் பிராண்ட், மாடல், எரிபொருள் வகை, உமிழ்வுத் தரம் மற்றும் வாகன எடை போன்ற தொழில்நுட்பத் தகவல்களைப் பெற மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் தனிப்பட்ட தரவுகள் எதுவும் பயன்படுத்தப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய அமைப்பு குறித்து EAD இன் சுற்றுச்சூழல் தரப் பிரிவின் செயல் நிர்வாக இயக்குநரான பைசல் அல் ஹம்மாடி அவர்கள் பேசுகையில், வாகனங்களில் வெளிப்படும் வாயுக்களை தொலைவில் இருந்து அளவிட மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளதாகவும், அத்துடன் வாகனங்கள் தொடர்பாக சேமிக்கப்படும் தரவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரிமோட் சென்சிங் சிஸ்டம் வேலை செய்யும் முறை:
இந்த ரிமோட் சென்சிங் சிஸ்டம்கள், சென்று கொண்டிருக்கும் வாகனங்கள் உமிழும் மாசு நிறைந்த வாயுக்களை அளவிட உறிஞ்சும் நிறமாலையைப் (absorption spectroscopy ) பயன்படுத்துகின்றன. வாகனங்கள் செல்லும் சாலைப் பாதைக்கு மேலே ஒரு ஒளி மூலமானது (light beam) பொருத்தப்பட்டு, அந்த மூலத்திலிருந்து வெளிப்படும் ஒலிக்கற்றையானது, வாகனங்களின் புகை வெளிப்படும் குழாய்களை ஊடுருவாமல் கடந்து செல்லும். இதன் மூலம் ரிமோட்-சென்சிங் அமைப்புகள் நைட்ரஜன் மோனாக்சைடு (NO), நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2), கார்பன் மோனாக்சைடு (CO), ஹைட்ரோகார்பன்கள் (HC), கார்பன் டை ஆக்சைடு (CO2) மற்றும் துகள்கள் (PM) ஆகியவற்றை துல்லியமாக கண்டறியும் என்பது குறிப்பிடத்தக்கது.