துருக்கி-சிரியா எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. 175 பேர் உயிரிழப்பு.. 700க்கும் மேற்பட்டோர் காயம்.. அதிகரிக்கும் எண்ணிக்கை..!!

துருக்கி – சிரியா எல்லைப் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மற்றுமொரு வலுவான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பிராந்தியத்தில் பல மாகாணங்களில் உணரப்பட்டது என்றும் வலுவான நில நடுக்கத்தின் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து பல உயிர்கள் துருக்கி மற்றும் சிரியாவில் பலியாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மை நிறுவனம், இந்த நிலநடுக்கம் 7.4 என்ற அளவுடன் கஹ்ரமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள பசார்சிக் நகரில் மையம் கொண்டிருந்ததாகக் கூறியிருக்கின்றது.
துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளதாகவும் 440 பேர் காயமடைந்ததாகவும் துருக்கியின் அவசர சேவை தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 330 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தற்பொழுது வரை வந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது உயரக்கூடும் என கூறப்படுகின்றது.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இத்தாலியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.