வளைகுடா செய்திகள்

கேரளாவிலிருந்து சவூதிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்.. வால் பகுதி ஓடுபாதையில் மோதியதாக தகவல்..!!

இந்தியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு பயணிக்கவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் முக்கியமான பகுதியில் கோளாறு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், அந்த விமானம் வெள்ளிக்கிழமை (பிப்.24) அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியாவின் தம்மாம் நோக்கி பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX385-ல் கோளாறு ஏற்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து அந்த விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, தம்மாம் நோக்கி பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 182 பயணிகள் இருந்ததாகவும், தம்மாமிற்கு ஐந்து மணி நேர பயணத்திற்கு போதுமான எரிபொருளை விமானம் ஏற்றிச் சென்றதால், அவசரமாக தரையிறக்க முயற்சி செய்ய முடியாத அளவுக்கு விமானம் கனமாக இருந்ததாகவும் தெரிகிறது.

எனவே விமானத்தின் எடையைக் குறைக்க, திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு முன்பு, விமானத்தின் எரிபொருளை விமானி அரபிக்கடலில் கொட்டியதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகே அந்த விமானம் எவ்வித அசம்பாவிதமுமின்றி பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

விமானத்தில் கோளாறு ஏற்பட்டு அவசரமாக தரையிறங்க இருப்பதாக வந்த அறிவிப்பை தொடர்ந்து, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவிக்கப்பட்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் காவல்துறையின் ஆம்புலன்ஸ்கள் உட்பட அனைத்து மீட்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்ருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து வெளியான தகவலின் படி, விமானம் ஓடுபாதையில் இருந்து பறக்கும் போது விமானத்தின் வால் பகுதி தரையில் மோதியதாக தெரியவந்துள்ளது. பொதுவாக விமானம் புறப்படும் போது விமானியின் தவறு காரணமாக, சில சமயங்களில் விமானத்தின் பின்புறம் ஓடுபாதையைத் தாக்கும் நிகழ்வுகள் நடக்கும் என சில அறிக்கைகள் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. .

Related Articles

Back to top button
error: Content is protected !!