அமீரக செய்திகள்

UAE: 14,700 தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத 317 மில்லியன் திர்ஹம்ஸை பெற்றுக்கொடுத்த தொழிலாளர் நீதிமன்றம்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் மாத ஊதியம் சரிவர வழங்கப்படாத தொழிலாளர்களுக்கு நீதிமன்றத்தின் தலையீட்டினால் அவர்களுக்குரிய ஊதியமானது கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி தொழிலாளர் நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு அபுதாபியில் மொத்தம் 14,777 தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்படாத 317 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான ஊதியத்தைப் பெற்றனர் என கூறப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட வழக்குகளில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகளின் விரைவான அமலாக்க உத்தரவுகளின் ஒரு பகுதியாக இந்த பணம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபி தொழிலாளர் நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, தொழிலாளர்களில் 8,560 பேர் கூட்டு அமலாக்க வழக்குகளில் மொத்தம் 125 மில்லியன் திர்ஹம்களையும் 6,217 தொழிலாளர்கள் தனிப்பட்ட அமலாக்க வழக்குகளில் 192 மில்லியன் திர்ஹம்ஸையும் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இது பற்றி கூறுகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும், ஜனாதிபதி நீதிமன்றத்தின் (Presidential Court) அமைச்சரும் அபுதாபி நீதித்துறையின் (ADJD) தலைவருமான ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவின்படி, தொழிலாளர் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்கும், தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை எளிதாக்குவதற்கும் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பது மற்றும் வழக்கு நேரத்தைக் குறைப்பது போன்ற இலக்கை அடைவதற்கு நீதிமன்றத்தை நஹ்யான் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, இது குறித்து தொழிலாளர் நீதிமன்றம் குறிப்பிடுகையில், வழக்கு தொடர்பான அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள், பதிவு செய்யப்பட்ட நேரத்தில் அதன் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்ட வழக்குகளைத் தீர்ப்பதற்கு அனுமதிப்பதாகவும், மேலும் அனைத்து தரப்பினரும் தங்கள் உரிமைகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் கட்டமைப்பிற்குள் பெறுவதை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தொழிலாளர்கள் உறவுகள் (Labour relations) சட்டத்தின் படி, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேம்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தொழிலாளர்களின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் சேவைகளை வழங்கும் முக்கிய பங்காளிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் நீதிமன்றம் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!