அமீரக செய்திகள்

UAE: 17 கால்பந்து மைதானங்களுக்கு சமமான பரப்பைக் கொண்ட புதிய பார்க்..!! ஷார்ஜாவில் திறப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா எமிரேட்டில் சுமார் 70,085 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள அல் கராயின் பார்க் 2 (Al Qara’in Park 2) புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவின் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஆட்சியாளருமான மாண்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்களின் வழிகாட்டுதலின்படி, அமைக்கப்பட்டுள்ள பூங்காவினை முனிசிபல் கவுன்சில் மற்றும் ஷார்ஜா நகர முனிசிபாலிட்டி இணைந்து திறந்து வைத்துள்ளது.

அத்துடன் இந்த திறப்பு விழாவில் ஷார்ஜா முனிசிபல் கவுன்சில் தலைவர் சலேம் அலி அல் முஹைரி, முவைலே புறநகர் கவுன்சில் தலைவர் காலித் அப்துல்லா அல் ரபூய், அல் ஹம்ரியா நகராட்சியின் இயக்குனர் முபாரக் அல் ஷம்சி, ஷார்ஜா கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் நகர அதிகாரிகள் போன்றோர் பங்கேற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலனுக்காக பூங்காக்களை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை சலேம் அலி அல் முஹைரி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஷார்ஜா முனிசிபாலிட்டியின் டைரக்டர் ஜெனரல் ஓபைத் சயீத் அல் துனைஜி அவர்கள் பேசுகையில், கடந்த ஆண்டு ஷார்ஜா முனிசிபாலிட்டியால் செயல்படுத்தப்பட்ட விவசாயத் திட்டங்களில் அல் கராயின் பார்க் 2 பூங்காவும் ஒரு பகுதியாகும் என்றும், ஷார்ஜா நகரத்தில் உள்ள பூங்காக்களில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என்றும் விளக்கியுள்ளார்.

தற்போது, ஷார்ஜா எமிரேட்டில் 70 க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ள நிலையில், அவை குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பல்வேறு வகையான விளையாட்டுகளை அனுபவிக்க, ஓய்வெடுக்க மற்றும் பயிற்சி செய்ய சிறந்த சூழலை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் கல்வி சம்பந்தமான ஒர்க் ஷாப்களை (educational workshop) செயல்படுத்தவும் பூங்காக்கள் இடத்தை வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

சுமார் 70,085 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில், 67,473 சதுர மீட்டர் பரப்பளவிற்கு பசுமை மற்றும் பல்வேறு வகையான பருவகால மலர்கள் உட்பட விவசாயப் பணிகளை முனிசிபாலிட்டி மேற்கொண்டுள்ளது. தற்போது, இப்பகுதியில், 9,250 மலர்ச்செடிகளும் 7,278 வெவ்வேறு வகைச் செடிகளும் உள்ளன. அத்துடன் அழகிய தோற்றத்திற்கு புதர்களும் நடப்பட்டுள்ளன.

அதுபோல, பார்வையாளர்களுக்கு சேவை செய்ய பூங்காவில் கால்பந்து மைதானம், குழந்தைகள் விளையாடும் திடல், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல், பெஞ்ச், கழிவறைகள் மற்றும் 112 சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்விளக்குக் கம்பங்களைப் பயன்படுத்தி பூங்காவில் விளக்குகள் அமைக்கும் பணியையும் முனிசிபாலிட்டி மேற்கொண்டுள்ளது. இவ்வாறு, ஒவ்வொரு சுற்றுப்புறத்திற்கும் ஒரு பூங்காவை வழங்குவதன் மூலம் குடும்பங்களின் தனியுரிமையைப் பாதுகாக்க முடியும் என்றும் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!