அமீரக செய்திகள்

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் டாலர் நிவாரண உதவியை அறிவித்த அமீரக அதிபர்..

துருக்கி மற்றும் சிரியா எல்லை பகுதியில் திங்கள்கிழமை முதல் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களினால் பல கட்டிடங்கள் சிதைந்ததுடன் கிட்டத்தட்ட 10,000 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் துருக்கியில் திங்கள்கிழமை தொடங்கி இன்று வரையிலும் அவ்வப்போது நிலநடுக்கம் தொடர்ந்து கொண்டே இருப்பதால் அந்த நாடே உருக்குலைந்து போயுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மாண்புமிகு ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக 100 மில்லியன் டாலரை வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உத்தரவின்படி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சகோதர நாடான சிரியாவிற்கு 50 மில்லியன் டாலர்களும், கடும் சேதத்தினால் வருந்தும் நட்பு நாடான துருக்கிக்கு 50 மில்லியன் டாலர்களும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது உலக நாடுகளுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொண்டுள்ள மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் நட்பு நாடுகளின் பேரிடர் காலங்களில் உதவிக்கரம் நீட்டி அணுகும் முறைகள் போன்றவற்றில் இந்த நிவாரண உதவிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் நஹ்யான் அவர்களின் உத்தரவின்படி, ஏற்கனவே, துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தற்காலிக மருத்துவமனையும், இடர்பாடுகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க தேடல் மற்றும் மீட்புக் குழுவும் அனுப்பப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், நிலநடுக்கத்தால் பாதிப்படைந்துள்ள சிரியா மற்றும் துருக்கி மக்களுக்கு உதவி வழங்குவதற்காக அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் “கேலண்ட் நைட் / 2 (Gallant Knight/2) ” என்ற முயற்சியை (Operation) தொடங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த ஆபரேஷனில் ஆயுதப்படைகள், உள்துறை அமைச்சகம் (Ministry of Interior), வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் ((Ministry of Foreign Affairs and International Cooperation), கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அறக்கட்டளை மற்றும் எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் போன்றவற்றின் பங்களிப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!