அமீரக செய்திகள்

துபாய்: ரமலானின் முதல் 10 நாட்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 3 பேர் மரணம், 34 பேர் காயம்..!!

துபாயில் ரமலான் மாதத்தின் முதல் 10 நாட்களில் 47 வெவ்வேறு போக்குவரத்து விபத்துக்களில் மூன்று வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 34 பேர் காயமடைந்துள்ளனர் என்று துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 29 விபத்துகளில் ஒரு மரணம் மற்றும் 23 காயங்கள் பதிவாகியது என்றும் இதனுடன் ஒப்பிடுகையில் இந்த வருட புள்ளிவிவரங்கள் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் இயக்குநர் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் கூறுகையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், வேகமாக செல்லுதல், வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியை விட்டுச் செல்லாமை, ஆபத்தான முறையில் முந்திச் செல்வது, உடம்புநிலை சரியில்லாமல் இருக்கும்போது வாகனம் ஓட்டுவது, லேன் விதிமுறைகளை கடைப்பிடிக்காதது உள்ளிட்ட கடுமையான போக்குவரத்து விதிமீறல்களால் விபத்துகள் ஏற்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். 

அத்துடன் இந்த மீறல்கள் ரமலான் மாத நோன்பு வைப்பதுடன் தொடர்புடையவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ரமலான் மாதத்தில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும், இஃப்தாருக்கு முந்தைய மணிநேரங்களில் வாகனம் ஓட்டும் போது பொறுமை மற்றும் நிதானத்தை கடைபிடிக்குமாறும் அதிகாரிகள் வாகன ஓட்டிகளை வலியுறுத்தியுள்ளனர்.

இஃப்தார் உணவுகள்

துபாய் காவல்துறையின் ‘விபத்து இல்லா ரமலான்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பாதுகாப்பான வாகனம் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ரமலானின் முதல் 10 நாட்களில் 63,800 இஃப்தார் உணவுகளை அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கியுள்ளனர்.

கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்

துபாய் காவல்துறையின் பொது செயல்பாட்டுத் துறையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் கர்னல் துர்கி பின் ஃபரிஸ் கூறுகையில், ரமழானின் முதல் 10 நாட்களில் அவசரகால எண்ணில் (999) 2,569 போக்குவரத்து அறிக்கைகளும் 158,380 அழைப்புகளும், (901) அழைப்பு மையம் வழியாக 21,865 அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் பொது செயல்பாட்டுத் துறையில் உள்ள (901) கால் சென்டர் மூலம் 2,456 மின்னஞ்சல்கள் மற்றும் துபாய் காவல்துறை இணையதளத்தில் கிடைக்கும் ‘லைவ் சாட்’ சேவையின் மூலம் 2,917 விசாரணைகளை கையாண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஃபாரிஸ், துபாய் காவல்துறையின் அவசர எண் (999) அல்லது துபாய் போலீஸ் செயலி மூலம் கிடைக்கும் ‘SOS’ சேவை வழியாகவும் அவசர காலங்களில் துபாய் காவல்துறையை அணுகுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!