அமீரக செய்திகள்

அமீரகத்தில் கொரியர், பார்சல்களை டெலிவரி செய்ய இனி ட்ரோன், ரோபோட் தான்.. சோதனை கட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய aramex நிறுவனம்…!!

மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் அறியப்பட்ட கொரியர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான aramex நிறுவனம் துபாயில் புதியதொரு முயற்சியை முன்னெடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் பல்வேறு நகரங்களில் இந்த aramex நிறுவனமானது செயல்பட்டு வருகிறது.

அதில் துபாயில் இயங்கி வரும் Aramex சமீபத்தில் ட்ரோன் மற்றும் ரோபாட் டெலிவரிகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது நிறுவனத்தின் “Future Delivery Programme” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும், மேலும், ஸ்மார்ட் ஷிப்பிங் முறையைப் பயன்படுத்தி, விரைவான, நிலையான மற்றும் செலவு குறைந்த டெலிவரிகளை செயல்படுத்துவதற்கான முனைப்பு இதன் மூலம் காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி வணிக ட்ரோன் டெலிவரி சேவை வழங்குநரான BARQ EV வழங்கிய ட்ரோன் டெலிவரி தொழில்நுட்பத்தை Aramex பயன்படுத்தியுள்ளது. மேலும், இதன் முதல்கட்ட சோதனைகள் ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (Rochester Institute of Technology – RIT), BARQ EV மற்றும் டெலிவரி ரோபாட்டிக்ஸில் நிபுணத்துவம் பெற்ற கொலம்பியாவை தளமாகக் கொண்ட கிவிபோட் (Kiwibot) ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், ட்ரோன்கள் பல திசை சென்சார்கள் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் மேலாண்மை அமைப்புடன் பொருத்தப்பட்டிருப்பதால், இது ஆர்டர் பிளேஸ்மென்ட், டிஸ்பாட்ச் மேனேஜ்மென்ட், ட்ரோன் ஃப்ளைட் ரூட்டிங் மற்றும் டெலிவரிகள் போன்றவை குறித்து அதிக துல்லியமான தரவுகளை Aramex-க்கு வழங்க உதவுவதாகக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், கிவிபோட்டின் self-driving தரைவழி டெலிவரி வாகனங்களில் கூடுதலாக, உயர் தொழில்நுட்ப சென்சார்கள், கேமராக்கள், ரேடார்கள் மற்றும் AI என சொல்லக்கூடிய ஆர்டிஃபிசியல் இண்டெலிஜெண்ஸ் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருப்பதால் சுற்றுப்புறங்கள் மற்றும் தடைகளை கண்டறிந்து அதற்கேற்ப செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, மேம்பட்ட GPS வழிசெலுத்தல் (GPS navigation system) அமைப்பின் மூலம் வாகனங்களால் மெய்நிகர் வரைபடங்களை உருவாக்கவும், பல வழிகளை உருவாக்கவும், தாமதங்கள் அல்லது தடைகளைப் பொறுத்து போக்கை மாற்றவும் முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (Dubai Civil Aviation Authority – DCAA), சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (Roads and Transport Authority – RTA), துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் அத்தாரிட்டி (Dubai Silicon Oasis Authority – DSO), துபாய் ஃபியூச்சர் ஃபவுண்டேஷன் (Dubai Future Foundation) மற்றும் துபாய் ஸ்மார்ட் சிட்டி (Dubai Smart City) ஆகியவற்றின் அனுமதியுடன் ட்ரோன் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து Aramex நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி (COO) அலா சவுதி அவர்கள் பேசுகையில், அமீரகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட பேக்கேஜ்களை வேகமான, பாதுகாப்பான வழிகள் மூலம் வாடிக்கையாளர்களைச் சென்றடைய Aramex செயல்பட்டு வருவதாகவும், அதேவேளையில், 2030 க்குள் கார்பன் உமிழ்வினை கட்டுப்படுத்துவதற்கான உறுதிமொழியை எடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், திட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து நிறுவனம் உற்சாகமாக இருப்பதாகவும், கூடுதலான வாடிக்கையாளர்களை சென்றடைய இந்த சேவையை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டிருப்பதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சியானது ஓமானின் மஸ்கட்டில் நடத்தப்பட்ட Aramex-இன் சுய ட்ரோன் டெலிவரியின் வெற்றிகரமான சோதனையைத் தொடர்ந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ட்ரோன் மற்றும் ரோபோ டெலிவரி சோதனையை மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பிராந்தியத்திலும், அது செயல்படும் பிற முக்கிய சந்தைகளிலும் விரிவுபடுத்த Aramex திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!