அமீரக செய்திகள்

வீடியோ: அமீரகத்தில் சாலையை கடக்கும் பாதசாரி மீது வேகமாக வந்த வாகனம் மோதி விபத்து..!! வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் காவல்துறை..!!

அபுதாபி காவல்துறை வெள்ளிக்கிழமை (மார்ச்.17) அன்று சமூக ஊடகங்களில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் பாதசாரிகளுக்கென நியமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சாலையைக் கடக்கும்போது அலட்சியமாக வாகனம் ஓட்டுபவர் பாதசாரியை சரமாரியாக மோதும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனவே, இது போன்ற விபத்துகளில் இருந்து பாதசாரிகள் மற்றும் ஓட்டுநர்களைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த வீடியோ கிளிப் பகிரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம் (Traffic and Patrols Directorate) வாகன ஓட்டிகள் சாலையைக் கடக்க நியமிக்கப்பட்ட இடங்களில் பாதசாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. அதுபோல, பாதசாரிகள் கடக்கும் போது போக்குவரத்தில் கவனம் செலுத்துமாறும், கவனத்தை சிதற விட வேண்டாம் என்றும் வாகன ஓட்டிகளை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

காவல்துறையால் பகிரப்பட்டுள்ள வீடியோவின்படி, பாதசாரி ஒருவர் சாலையைக் கடக்க முற்பட்ட போது, அதிவிரைவாக வந்த பிக்கப் டிரக் வேகத்தைக் குறைக்காமல் அந்த நபரின் மீது மோதியுள்ளது. இதுபோலவே, ஒரு SUV காரை ஓட்டிச்சென்ற நபர் சைக்கிள் ஓட்டிச்சென்றவர் மீது மோதியதால் அவர் சைக்கிளில் இருந்து பறந்து சென்ற மற்றொரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சாலையைக் கடக்க முயற்சிக்கும்போது சாலையில் காத்திருக்கும் நபர்களைக் கவனிக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு என்பது பாதசாரிகளுக்கும் சாலைகளில் செல்லும் ஓட்டுநர்களுக்கும் இடையிலான கூட்டுப் பொறுப்பு என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய போக்குவரத்து சட்டத்தின்படி, போக்குவரத்து சட்டத்தை மீறும் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகளுக்கென நியமிக்கப்பட்ட இடங்களில் பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கத் தவறினால் 500 திர்ஹம்கள் அபராதம் மற்றும் ஆறு பிளாக் பாயிண்டுகள் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!