அமீரக செய்திகள்

அமீரகத்தில் இடி, மின்னல், மழையுடன் நிலவும் மோசமான வானிலை.. பாப்-அப் மெஸ்ஸேஜில் எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மின்னல், இடி மற்றும் கனமழையுடன் மோசமான வானிலை நிலவி வரும் நிலையில், அமீரக குடியிருப்பாளர்களுக்கு நிலையற்ற வானிலை குறித்து அபுதாபி மற்றும் துபாய் காவல்துறையினர் மொபைல் பாப்-அப் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் மொபைல் போன்களுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் UAE Safety Alerts எனப்படும் வயர்லெஸ் எச்சரிக்கை வாயிலாக நாட்டில் “நிலையற்ற வானிலை” நிலவுவதாக குடியிருப்பாளர்களுக்கு காவல்துறை இதனை தெரிவித்துள்ளது. ‘பொது பாதுகாப்பு எச்சரிக்கை’ என்ற தலைப்பில் அரபு மற்றும் ஆங்கிலத்தில் எச்சரிக்கை செய்தி, அதிர்வு மற்றும் அதிக சப்தத்துடன் இந்த எச்சரிக்கையை அமீரக காவல்துறையினர் பாப்-அப் மெஸ்ஸேஜ் ஆக அனுப்பியுள்ளனர்.

இது குறித்து துபாய் காவல்துறை விடுத்த வயர்லெஸ் எச்சரிக்கையில், “துபாய் நிலையற்ற வானிலையை அனுபவித்து வருகிறது. கடற்கரைகள் மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து விலகி இருங்கள். அதிகாரிகளின் அறிவுரைகளை கவனத்தில் கொண்டு வாகனத்தை ஓட்டவும். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளனர்.

அதேபோன்று அபுதாபி காவல்துறை குடியிருப்பாளர்களுக்கு விடுத்த எச்சரிக்கையில் “மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். மின்னணு தகவல் பலகைகளில் காட்டப்படும் மாறிவரும் வேக வரம்புகளைப் பின்பற்றுங்கள். பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்” என வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை நேற்றும் இன்றும் ஆங்காங்கே பதிவாகியுள்ளது. துபாயின் லஹ்பாப் மற்றும் மர்க்கம் ஆகிய இடங்களிலும், ஷார்ஜாவின் அல் மடம் மற்றும் அபுதாபியின் சில பகுதிகளிலும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

அதேபோன்று ஷார்ஜாவின் அல் முதீனா, கார்னிச், மலீஹா மற்றும் அல் கான் ஆகிய இடங்களிலும் துபாயின் தேரா, ஹத்தா மற்றும் அபுதாபி, அஜ்மான் ஆகிய இடங்களின் சில பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!