வளைகுடா செய்திகள்

சவூதி அரேபியாவிற்கான இந்தியாவின் புதிய தூதுவருக்கு இந்திய சமூக மற்றும் தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு…!!

சவூதி அரேபியாவிற்கான புதிய இந்தியத்தூதுவராக, இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட மேதகு சுஹேல் அஜாஸ் கான் அவர்களுக்கு, சவூதி அரேபியாவில் இயங்கிவரும் பல்வேறு இந்திய சமூகம் மற்றும் அமைப்புகளின் சார்பாக தலைநகர் ரியாத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

சவூதி அரேபியாவில் வசித்துவரும் 350 க்கும் மேலான இந்தியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தஃபர்ரஜ் எனும் தமிழ் நுண்கலை மன்றத்தின் தலைவர் திரு.அஹமது இம்தியாஸ், ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.வெற்றிவேல், இந்தியன் வெல்பேர் போரம் திரு.நூர்முஹம்மது, அயலகத்தமிழர்கள் இந்தியச்சங்கத்தின் சார்பாக திருமதி.கவிதா கணேஷ், ரியா அமைப்பு சார்பாக திரு.மாதவன், இந்திய நுண்கலை மன்றம் சார்பாக திரு.அருண் ஷர்மா உள்ளிட்ட பலரும் புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்தியத்தூதுவருக்கு பூங்கொத்து மற்றும் பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

மேலும் இவர்களுடன் காயிதே மில்லத் பேரவை சார்பாக திரு.நாசர், உதயம் அமைப்பு சார்பாக திரு.சிக்கந்தர், தமாம் தமிழ்ச்சங்கம் சார்பாக தலைவர் திரு.அப்துல் சத்தார் மற்றும் பொறுளாளர் திரு.அகமது பைஷல், சவூதி தமிழ் மீடியா சார்பாக திரு.ஜாஹிர் ஹீசைன் மற்றும் திரு.ரஹ்மத்துல்லாஹ், சவூதி தமிழ் கம்யூனிட்டி சார்பாக திரு.அப்துல்சமத் மற்றும் திரு.இப்றாஹிம் ஆகியோரும் மற்றும் சவூதியில் இயங்கி வரும் இந்தியாவை சேர்ந்த மற்ற பிற மாநிலங்களின் சமூக அமைப்புகளின் தலைவர்கள் மற்றம் உறுப்பினர்களும் இந்தியத்தூதர் மேதகு சுஹேல் அஜாஸ் கான் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும், சந்தன மாலை மற்றும் பொன்னாடை போர்த்தியும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஒவ்வொரு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, புதிய தூதுவருக்கு 3 நிமிடங்கள் வாழ்த்துரை வழங்கவும் நிகழ்ச்சி அமைப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக திரு.அஹமது இம்தியாஸ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றிய பொழுது, இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றி பேசிய வாசகங்களை மேற்கோள்காட்டி திருக்குறள் மூலம் வரவேற்பு கொடுத்தது தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வண்ணம் அமைந்தது.

அத்துடன், சவூதி அரேபியாவிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கு உரிய அமைச்சகத்திடம் முறையிடுவது, இறந்தோர் உடலை தாயகம் அனுப்பி வைக்க சவப்பெட்டி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தை கலைவது, சவூதிஅரேபியாவில் உயர் படிப்புக்கான இந்தியக் கல்லூரிகளை கொண்டுவர நடவடிக்கை எடுப்பது, சவூதிவாழ் இந்திய தொழிலாளர்களின் குறைதீர்க்கும் நாளை தூதரகத்தில் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் தமிழ் மற்றும் இந்திய சமூக உறுப்பினர்கள் சார்பாக இந்தியத் தூதுவருக்கு வைக்கப்பட்டது.

பின்னர் இறுதியாக சவூதி அரேபியாவின் இந்திய தூதர் மேதகு சுஹேல் அஜாஸ் கான் அவர்கள் சிறப்புறையாற்றி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை கூறிய அனைவருக்கும் தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

தற்பொழுது சவூதி அரேபியாவிற்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு சுஹைல் அஜாஸ் கான் அவர்கள், இதற்கு முன்னர் 2005 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் துணை தூதுவராக பணியாற்றியுள்ளார். அதற்கடுத்தபடியாக செப்டம்பர் 2017 முதல் ஜூன் 2019 வரையிலான காலகட்டத்தில் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் துணை தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!