UAE: 10,000க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு 75% வரை தள்ளுபடி!! அதிகளவிலான பார்வையாளர்களைக் கவரும் ‘ரமலான் நைட்ஸ் 2023’….!!

ஷார்ஜாவில் பிரபலமான வணிக மற்றும் சந்தைப்படுத்தல் நிகழ்வான ‘ரமலான் நைட்ஸ் 2023’ இன் 40வது பதிப்பை எக்ஸ்போ சென்டர் ஷார்ஜா நடத்தவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்வில் பிரபல பிராண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து 10,000க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (SCCI) ஆதரவுடன் எக்ஸ்போ சென்டரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 33வது ஷார்ஜா ரமலான் ஃபெஸ்டிவலின் ஒரு பகுதியான இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 5 முதல் 21 வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆண்டு ‘Ramadan Nights 2023’ அதிகளவிலான பார்வையாளர்களை ஈர்க்கும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 17 நாட்களுக்கு நடைபெறும் இந்த கண்காட்சி தினமும் மாலை 5 மணி முதல் அதிகாலை 1 மணி வரையிலும், ஈத் அல் ஃபித்ரின் போது மாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த குடும்ப நிகழ்வு ரமலான் மாதம் முழுவதும் பார்வையாளர்களின் ஷாப்பிங் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் ஈத் அல் ஃபித்ர் (Eid Al Fitr) கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளுக்கு வழிவகுக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றுடன் ‘ரமலான் நைட்ஸ் 2023’ பல்வேறு வயதினருக்கு ஏற்ற கேம்கள் மற்றும் கேளிக்கை நடவடிக்கைகளுக்கான பிரத்யேகப் பகுதியைக் கொண்டுள்ளது என்றும் அதுமட்டுமில்லாமல், நிகழ்ச்சிகள், பாரம்பரிய ஆடைகள், கருவிகள், கைவினைப்பொருட்கள், பானங்கள் மற்றும் பிரபலமான ரமலான் உணவுகள் ஆகியவற்றையும் பார்வையாளர்கள் அனுபவித்து மகிழலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமலான் நைட்ஸின் சிறப்பம்சங்கள்:
இந்நிகழ்வு குறித்து ஷார்ஜா வர்த்தக மற்றும் தொழில்துறையின் (SCCI) தலைவரும், எக்ஸ்போ சென்டர் ஷார்ஜாவின் தலைவருமான அப்துல்லா சுல்தான் அல் ஓவைஸ் அவர்கள் கூறுகையில், ஷார்ஜா ரம்ஜான் பண்டிகையின் சிறந்த நடவடிக்கைகளில் ‘ரமலான் நைட்ஸ்’ ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரமலான் நைட்ஸ் நிகழ்வானது சில்லறை வணிகத் துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய தளத்தை வழங்குவதுடன் சமூக ஒற்றுமை மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய எக்ஸ்போ சென்டர் ஷார்ஜாவின் தலைமை நிர்வாக அதிகாரி சைஃப் முகமது அல் மிட்ஃபா அவர்கள், புனித மாதமான ரமலான் மற்றும் ஈத் பண்டிகைகளில் பார்வையாளர்களுடன் பங்கேற்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.