வளைகுடா செய்திகள்

சவுதி அரேபியாவில் தொடங்கப்படும் புதிய ஏர்லைன் சேவை.. அறிவிப்பை வெளியிட்ட இளவரசர்.. 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு..!!

சவுதி அரேபியாவில் புதிதாக ஒரு நேஷனல் ஏர்லைன் நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக ராஜ்யத்தின் பட்டத்து இளவரசரும், பிரதமரும், மற்றும் பொது முதலீட்டு நிதியத்தின் (Public Investment Fund – PIF) தலைவருமான மாண்புமிகு முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

ரியாத் ஏர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய விமான நிறுவனம், PIF இன் ஆளுநர் யாசிர் அல்-ருமையன் அவர்களின் தலைமையில் இருக்கும் என்றும், இது ஒரு PIF-க்கு சொந்தமான நிறுவனமாக இருக்கும் என்றும் சவுதி பிரஸ் ஏஜென்சி (SPA) தெரிவித்துள்ளது. அத்துடன் விமான நிறுவனத்தின் முதன்மை நிர்வாகத்தில் சவுதி மற்றும் சர்வதேச நிபுணத்துவம் (international expertise) இருக்கும் என்றும் SPA கூறியுள்ளது.

விமான போக்குவரத்து, போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக் தொழில்களில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் மிகுந்த டோனி டக்ளஸ் என்பவர் இந்த புதிய நிறுவனத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, இவர் ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட எதிஹாட் விமான நிறுவனத்தை ஜனவரி 2018 முதல் அக்டோபர் 2022 வரை டக்ளஸ் வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சவுதியின் தலைநகரமான ரியாத், இந்த விமான நிறுவனத்தின் மையமாக இருக்கும் என்றும், இது சவுதியில் 20 பில்லியன் GDP வளர்ச்சி மற்றும் 200,000 க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த புதிய ஏர்லைன் பயன்பாட்டிற்கு வந்ததும், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 100 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இது பறக்கும் என்றும் பல்வேறு நாடுகளுக்கு இடையே பயணிக்கும் பயணிகளை இணைக்கும் மையமாக சவுதியை மேம்படுத்த இது உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு சவுதி அரேபியாவின் கலாச்சார மற்றும் இயற்கை இடங்களைச் சுற்றிப்பார்க்க விமான நிறுவனம் வாய்ப்பளிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி பிரஸ் ஏஜென்சி வெளியிட்ட தகவல்களின்படி, சவூதியின் தேசிய போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக் உத்தி மற்றும் தேசிய சுற்றுலா உத்திக்கு தூண்டுதலாக ரியாத் ஏர் செயல்படும் என்றும், விமான போக்குவரத்து விருப்பங்களை அதிகரிப்பதுடன் சரக்கு மற்றும் சர்வதேச பயணிகளின் திறனை இது அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, விஷன் 2030க்கு ஏற்றவாறு சவுதி விமானப் போக்குவரத்துத் துறையின் உலகளாவிய போட்டித்தன்மையையும் இது ஆதரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ரியாத் ஏர் நிறுவனமானது உள்ளூர் பொருளாதாரத்தின் பல்வகைப்படுத்தலுக்கு உதவும் நம்பிக்கைக்குரிய துறைகளின் திறன்களை ஆதரிக்கும் PIF இன் மூலோபாயத்தின் ஒரு பகுதி என தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!