அமீரக செய்திகள்

UAE: பார்க்கிங் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு நபர் இருந்தாலும் கட்டணம் செலுத்த வேண்டும்… மீறுபவர்களுக்கு அபராதம்.. முனிசிபாலிட்டி அறிவுறுத்தல்..!!

ஷார்ஜாவில் கட்டண பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு வாகனத்திற்குள்ளேயே இருப்பது, கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்காது என்று வாகன ஓட்டிகளுக்கு பார்க்கிங் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் ஷார்ஜா முனிசிபாலிட்டி நினைவூட்டியுள்ளது.

பொதுவாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை கட்டண பார்க்கிங் மண்டலங்களில் நிறுத்தி பணம் செலுத்தாமல் உள்ளே காத்திருப்பார்கள். அதிலும் சிலர் ஒரு தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிப்பதற்காக அல்லது யாரோ ஒருவருக்காக காத்திருக்க அவர்கள் ஹஸார்ட் லைட்ஸை (hazard lights) எரிய விட்டு வாகனத்தில் அமர்ந்திருப்பது வழக்கமான நடைமுறையாகும்.

இருப்பினும், வியாழன் அன்று ஷார்ஜா முனிசிபாலிட்டி தனது சமூக ஊடக பதிவில், “வாகனத்தில் தங்கியிருப்பது ஓட்டுநருக்கு பார்க்கிங் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்காது. வாகனம் நிறுத்தும் இடத்தை ஆக்கிரமித்து அல்லது அந்த பார்க்கிங் இடத்தை பயன்படுத்தினால், வாகன ஓட்டிகள் பார்க்கிங் கட்டணத்தை செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசமும் வெளியிடப்பட்டுள்ளது. பார்க்கிங் மீட்டர், SMS மற்றும் டிஜிட்டல் ஷார்ஜா ஆப் போன்றவற்றின் மூலம் பார்க்கிங் தொடங்கியதிலிருந்து 10 நிமிடங்களுக்குள் ஓட்டுநர்கள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பார்க்கிங் சந்தா வசதியையும் பயனர்கள் பெறலாம் என்றும், இது வாகன ஓட்டிகளை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு குறிப்பிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எந்தவித சூழலிலும் வாகன ஓட்டிகள் பார்க்கிங்கிற்கு பணம் செலுத்தத் தவறினால் 150 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் வாகனத்தை நிறுத்தினால் 100 திர்ஹம் அபராதமும், மாற்றுத்திறனாளிகள் வாகன ஓட்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தினால் 1,000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும் என்றும் ஷார்ஜா முனிசிபாலிட்டி இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!