அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் வேலை தொடர்பான ரகசியத் தகவல்களை ஊழியர்கள் வெளியிட்டால் குற்றமா.? அமீரக சட்டம் சொல்வது என்ன.?

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் ரகசியங்களை வெளிப்படுத்தினால், முன் அறிவிப்பு இல்லாமல் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படலாம் என்று அமீரகத்தில் உள்ள சட்ட ஆலோசகர்கள் கூறியுள்ளனர். மேலும், இது போன்ற குற்றத்திற்கு குறைந்தபட்சம் ஓராண்டு சிறைத்தண்டனையுடன் குறைந்தபட்சம் 20,000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமீரகத்தை பொறுத்தவரை IT அமைப்புகள் மூலம் பணியிட ரகசியங்களை வெளியிடுவது சைபர் குற்றங்களாகக் கருதப்படுகிறது, அவ்வாறு வெளிப்படுத்தினால் இந்த குற்றத்தின் கீழ் குறைந்தது ஆறு மாதங்கள் சிறையில் வைக்கப்படுவதுடன் குறைந்தபட்சம் 20,000 திர்ஹம்ஸ் முதல் 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்ட வல்லுனர்களின் கூற்றுப்படி, ஊழியர்கள் தங்கள் பணிக் காலத்தின்போது, வேலை தொடர்பான அல்லது அவர்களின் முதலாளிக்கு சொந்தமான தகவல்கள் அடங்கிய ஆவணங்களின் அசல் அல்லது நகலை தங்கள் தனிப்பட்ட உடைமையில் வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஊழியர்கள் தங்கள் சேவையின் முடிவில் பணி தொடர்பான தகவல்கள் மற்றும் தரவை தங்கள் முதலாளிக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

ஊழியர்கள் பகிர்ந்த ரகசியத்தினால் ஏற்படும் இழப்புகள் நிறுவன முதலாளிக்கு மிக அதிகமாக இருக்கும். ஆகவே, ரகசியத் தகவலை பாதுகாப்பதற்காக முதலாளிகள் தங்கள் வேலை ஒப்பந்தத்தில் ஒரு விதிமுறையைச் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது, இது பணியாளர்கள் தங்கள் வேலை முடிவடையும் போது அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் இரகசியத் தகவலைத் திரும்பப் பெற வேண்டும் என்பதாகும்.

வேலை ஒப்பந்த விதிகளின்படி, முதலாளிகள் தங்கள் இரகசியக் கடமைகளை மீறும் ஊழியருக்கு எதிராக சிவில் வழக்குத் தாக்கல் செய்யவும் உரிமை உண்டு. அத்துடன் ஊழியரின் பணிக்காலத்தின் போது அல்லது ஒப்பந்தம் முடிவடைந்த ஒரு வருடத்திற்குள் இது குறித்த வழக்கு தாக்கல் செய்யப்படலாம். எவ்வாறாயினும், ஒரு ஊழியர் முதலாளியின் தொழில் ரகசியத்தை வெளியிட்டால், சட்ட நடவடிக்கையைத் தொடங்க அத்தகைய காலக்கெடு எதுவும் இல்லை என்பதையும் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் குறிப்பிடுகையில், ஊழியர்களிடையே தற்செயலாக வர்த்தக ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வது பொதுவானது என்றாலும், வேண்டுமென்றே ரகசியத்தை வெளிப்படுத்துவது ஊழியர்களுக்கு எதிராக ஒரு கிரிமினல் புகார் உட்பட மிகவும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, நிறுவனங்கள் தங்கள் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களில் ரகசியத்தன்மையின் உட்பிரிவைச் சேர்க்குமாறு அறிவுறுத்துவதாகவும், இது வர்த்தக ரகசியங்களை ஊழியர்கள் பொறுப்புடன் பேணுவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவையெல்லாம் ரகசிய தகவல்?

ஐக்கிய அரபு அமீரக சட்டத்தில் “ரகசிய தகவல்” என்ற வார்த்தைக்கு துல்லியமான வரையறை இல்லையென்றாலும், ஒரு ஊழியர் தனது வேலை தொடர்பாக அணுகக்கூடிய எந்தவொரு தகவல், தரவு, தொழில்துறை அல்லது வணிக ரகசியங்கள் அனைத்தும் ரகசியத் தகவலாகவே கருதப்படுகின்றன.

சில தகவல்கள் இரகசியக் கடமைகளுக்கு உட்பட்டதா என்பது குறித்து நிறுவன முதலாளிக்கும், ஊழியர்களுக்கும் இடையே சர்ச்சை எழுந்தால், அமீரக சட்டப்படி அந்தத் தகவலின் உரிமையை நிரூபிக்கும் பொறுப்பை நிறுவனத்தின் முதலாளி ஏற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!