அமீரக செய்திகள்

துபாயில் 80% டாக்ஸிகளை ஸ்ட்ரீட் ஹெயிலிங்கில் இருந்து இ-ஹெய்லிங்கிற்கு மாற்றுவதாக RTA வெளியிட்டுள்ள தகவல்…

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வழக்கமான டாக்ஸியின் ஸ்ட்ரீட்-ஹெய்ல் (சாலைகளில் நேரடியாக பெறுவது) சேவையிலிருந்து இ-ஹெய்ல் சேவைக்கு (முன்பதிவின் மூலம் பெறுவது) முழுமையாக மாறுவதற்கான திட்டத்தை அங்கீகரித்துள்ளது. மேலும் எதிர்வரும் ஆண்டுகளில் இந்த டாக்ஸி இ-ஹெய்ல் சேவை விகிதத்தை 80 சதவீதமாக அதிகரிப்பதற்கும் ஆணையம் இலக்கை நிர்ணயித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் துபாயில் டாக்ஸியை பயன்படுத்தியவர்களில் 30 சதவீதம் பேர் ஹாலா இ-ஹெய்லிங் டாக்ஸி (Hala Taxi) ரைடுகளை பயன்படுத்தியுள்ளனர். அந்த வெற்றியை தொடர்ந்து இ-ஹெயில் சேவையை விரிவுபடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக RTA அறிவித்துள்ளது.

இது குறித்து RTA டைரக்டர் ஜெனரலும், நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மத்தார் அல் தாயர் கூறுகையில், “ஸ்ட்ரீட் ஹெய்லிங்கிற்கு பதிலாக, இ-ஹெய்ல் டாக்ஸி சேவைகளின் விரிவாக்கம், துபாயை உலகின் முன்னணி நகரமாக மாற்றும் அரசாங்கத்தின் இலக்கை வலுப்படுத்துவதுடன், நகர்ப்புற போக்குவரத்து திட்டமிடலில் உலகளாவிய மாற்றத்துடன் ஒத்துப்போகிறது” என்று கூறியுள்ளார். அத்துடன் இந்த சேவை மாற்றத்தின் மூலம் தனிநபர் நடமாட்டத்தை மேம்படுத்துதல், தனியார் கார்களை சார்ந்திருப்பதை குறைத்தல் மற்றும் குடியிருப்பாளர்களிடையே மகிழ்ச்சியை அதிகரித்தல் போன்றவற்றில் வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிக்க கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.

எலக்ட்ரானிக் முறையில் முன்பதிவு செய்யப்படும் இ-ஹெய்லிங் டாக்ஸி சேவை, 3 முதல் 5 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான காத்திருப்பு நேரங்களுடன் அதிக சதவீத பயணங்களுக்கு வழிவகுக்கும். ஆகையால் இந்த சேவை வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி மற்றும் திருப்தியை அதிகரிக்கும். அதே நேரத்தில் வீணான மைலேஜ், தேவையற்ற எரிபொருள் செலவு மற்றும் கார்பன் உமிழ்வு ஆகியவையும் இந்த சேவையினால் குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல, மொபைல் ஆப் வழியாக இ-பேமெண்ட், திட்டமிட்ட பயணம், பயண விருப்பங்கள், ஓட்டுநர் மற்றும் வாகன விவரங்களுக்கான அணுகல் போன்ற பிற அம்சங்களிலிருந்தும் வாடிக்கையாளர்கள் பயனடையலாம் என்றும், கூடுதலாக இந்த சேவைகள் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைத்து வெகுஜன பயணிகள் தாங்கள் சேர வேண்டிய இடங்களை எளிதாக சென்றடைய உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துபாய் முழுவதும் இ-ஹெய்ல் டாக்ஸி சேவைகளை பிரத்தியேகமாக வழங்குவதற்கு பிரத்யேகமான டாக்சிகளை RTA ஒதுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய சேனல்களை உருவாக்கி, ஓட்டுனர்களுக்கான ஊக்குவிப்பு முயற்சிகளை செயல்படுத்துவதன் மூலம் இ-ஹெய்ல் சேவை மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இ-ஹெய்ல் வாகனங்களுக்கு பார்க்கிங் இடங்களை ஒதுக்கீடு செய்தல், அதிக தேவை உள்ள பகுதிகளில் பார்க்கிங் வசதியை விரிவுபடுத்துதல் மற்றும் RTA மற்றும் ஹாலா ஸ்மார்ட் ஆப்-இல் இந்த பார்க்கிங் இடங்களை அடையாளம் காண்பதற்கான வசதியை ஏற்படுத்துதல் ஆகியவையும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.

 முன்பதிவு செய்வதற்கான படிகள்:

  • முதலில் Careem பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து உங்களுக்கென தனிப்பட்ட கணக்கை உருவாக்க வேண்டும். பின்னர் கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து ஹலா வாகனங்களைத் தேர்ந்தெடுத்து, தங்கள் பிக்-அப் இடத்தை உறுதிசெய்யலாம்.
  • சேருமிடம் மற்றும் விருப்பமான கட்டண முறை தேர்ந்தெடுக்கப்பட்டதும், பயண முன்பதிவை இறுதி செய்ய ‘Yalla’ பொத்தானை கிளிக் செய்யவும்.
  • அதனை தொடர்ந்து ஓட்டுநர்  மற்றும் முன்பதிவு தகவல் அடங்கிய மெஸ்சேஜ் விரைவில் உங்களுக்கு அனுப்பப்படும்.

இந்த இ-ஹெய்ல் சேவையானது, 10 வினாடிகளுக்குள் முன்பதிவுகளைப் பாதுகாப்பது, கிடைக்கக்கூடிய மிக அருகில் இருக்கும் வாகனத்தைக் கண்டறிவது மற்றும் பயணத்தை நிகழ்நேரத்தில் கண்காணிப்பது போன்ற பல அம்சங்களை வழங்கும். கூடுதலாக, இ-ஹெய்ல் சிஸ்டம் மூலம் பயனர் கோரிக்கைகளைப் பெற அனுமதிப்பதன் மூலம், ரோமிங்கின் தேவையை நீக்கி, ஓட்டுநர்களுக்கான செயல்முறையை இந்தச் சேவை நெறிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!